பெங்களூரு: கோவிட் நெருக்கடி ஒருபுறம், நிதிச் சிக்கல் மறுபுறம் என ககன்யான் திட்டத்தை திட்டமிட்டப்படி முடிக்க விஞ்ஞானிகள் தீவிரமாக உழைத்துவருகின்றனர்.
ககன்யான் திட்டத்தின் முதல் விதை 2006இல் போடப்பட்டது. இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம் ககன்யான் என்ற இந்திய விண்கலத்தின் மூலம் மனிதர்களை பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு அழைத்துச் செல்வதாகும்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம்
இந்த விண்கலத்தில் மூன்று பேர் வரை பயணிக்கலாம். இத்திட்டத்தை 2021 டிசம்பரில் செயல்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி 2018இல் உறுதியளித்திருந்தார். மேலும், “75ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னதாக நாம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் வெற்றிபெற வேண்டும்” என்றும் விஞ்ஞானிகளிடம் கேட்டிருந்தார்.
இந்நிலையில் 2019ஆம் ஆண்டின் இறுதிவாக்கில் உலக நாடுகளில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. சீனாவின் வூகானில் அறியப்பட்ட முதல் பாதிப்பு, படிப்படியாக உலக நாடுகளும் பரவத் தொடங்கியது. இதையடுத்து உலக நாடுகள் பொதுமுடக்கத்தை அறிவித்தன. இந்தியாவிலும் 2020 மார்ச் மாத நிறைவிலும் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது.
வன்பொருள்கள் கிடைப்பதில் சிக்கல்
இந்நிலையில் நிதி மற்றும் ககன்யான் விண்கலத்துக்கு தேவையான வன்பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் ககன்யான் விண்வெளித் திட்டத்தை திட்டமிட்டப்படி டிசம்பர் 2021இல் கொண்டுவருவதில் சிக்கல் உள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியிருந்தார்.
இந்நிலையில், “ககன்யான் திட்டத்தை அறிவித்த தினத்தில் செயல்படுத்த நேரத்துடன் போராடிவருகிறோம்“ என இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.
விஞ்ஞானி பேட்டி
இது குறித்து அவர் கூறுகையில், “கோவிட் நெருக்கடி, பொருளாதாரச் சிக்கல், வன்பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் என பல பிரச்சினைகள் உள்ளன. இதற்கிடையிலும் ககன்யான் திட்டத்தை திட்டமிட்ட காலத்தில் செயல்படுத்த போராடிவருகிறோம்” என்றார்.
முன்னதாக விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், “2021 டிசம்பரில் இரண்டாவது ஆளில்லா விண்வெளித் திட்டம் செயல்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து 2022-23ஆம் ஆண்டுகளில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும்” என்று கூறியிருந்தார்.
4ஆவது நாடு இந்தியா
ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக நான்கு இந்திய விண்வெளி வீரர்கள் ஏற்கனவே ரஷ்யாவில் விண்வெளி விமானப் பயிற்சியைப் பெற்றுள்ளனர். இந்தப் பணியில் இஸ்ரோவின் ஹெவி-லிப்ட் லாஞ்சர் ஜி.எஸ்.எல்.வி எம்.கே III பயன்படுத்தப்பட உள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. அந்தவரிசையில் உலகிலேயே மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் 4ஆவது நாடாக இந்தியா விரைவில் இடம்பெற உள்ளது. ககன்யான் என்பது முழுமையான தன்னாட்சி கொண்ட 3.7 டன் எடையுள்ள விண்கலம் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கரோனா- ஆய்வில் தகவல்!