புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் இருந்து ஜனநாயகத்தின் ஆன்மா உறிஞ்சப்பட்டுவிட்ட நிலையில், புதிய கட்டிடத்திற்கு எந்த மதிப்பும் இல்லை. இதன்காரணமாக, நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவை, புறக்கணிப்பதாக தெரிவித்து உள்ள 19 எதிர்க்கட்சிகள், இதுதொடர்பாக, கூட்டாக இணைந்து அறிக்கையை வெளியிட்டு உள்ளனர்.
19 எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, "நாடாளுமன்ற புதிய கட்டடம் திறப்பு என்பது, ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு ஆகும். ஆனால், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்த அரசு, ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக செயல்பட்டு வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டட விவகாரத்தில், அரசு மேற்கொண்டுள்ள ஏதேச்சதிகார முறையை நாங்கள் அங்கீகரிக்கவில்லை.
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு நிகழ்வு தொடர்பாக, நாங்கள், எங்களது எதிர்ப்பை முன்வைத்து உள்ளோம். இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தை, பிரதமர் மோடி, திறந்து வைக்க இருக்கும் முடிவை, நாங்கள் முற்றிலுமாக புறக்கணிக்கிறோம். இந்த நிகழ்விற்கு, நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைக்கப்படாமல், புறக்கணிக்கப்பட்டு இருப்பது, நமது நாட்டின் ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட நேரடி தாக்குதலாகவே நாங்கள் கருதுகிறோம்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் 79வது பிரிவின்படி, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒர் ஜனாதிபதி, நாடாளுமன்றம், இரண்டு அவைகள், உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இங்கு ஜனதிபதி என்பவர், நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் மட்டுமல்ல, அவர் நாடாளுமன்றத்தின் ஒருங்கிணைந்த நபரே ஆவார். ஜனாதிபதியின் ஒப்புதல் இல்லாமல், நாடாளுமன்றத்தின் எவ்வித செயல்பாடுகளும் நடைபெற இயலாது. நாடாளுமன்ற கூட்டத்ட்தொடர் எதுவாக இருந்தாலும், அதன் முதல் நாளில், ஜனாதிபதி சிறப்புரை ஆற்றுவார். அங்கு தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள், ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்ற பிறகே, அவை சட்டங்களாக மாறும்.
அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நபரையே, புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நிகழ்விற்கு அழைக்க, பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்து உள்ளார். இது நாட்டின் உயர் பதவியில் உள்ள ஒருவரை அவமானப்படுத்தும் செயல் மட்டுமல்லாது, அரசியலமைப்பையே களங்கப்படுத்தும் நிகழ்வு ஆகும். நாட்டின் ஜனாதிபதி ஆக பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள நிலையில், அவர் புறக்கணிக்கப்பட்டு இருப்பது அவரது பதவிக்கு இழுக்கு ஏற்படுத்துவது போன்றது ஆகும்.
ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்களை செய்வது, தற்போதைய பிரதமர் மோடிக்கு ஒன்றும் புதிது அல்ல. நாட்டு மக்களின் நலனுக்காக, பேசும் உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வது, இடைநீக்கம் செய்வது, அவர்களின் குரலை ஒடுக்குவது போன்ற நிகழ்வுகளால், அவர், நாடாளுமன்ற செயல்பாடுகளையே வெறுமையாக்கி உள்ளார். மக்களின் நலன் சார்ந்த விவாதங்களின்போது, பல்வேறு உறுப்பினர்கள், அவையை தொடர்ந்து முடக்கி வருகின்றனர்.
வேளாண் சட்டங்கள் போன்ற சர்ச்சைக்குரிய மசோதாக்கள், எவ்வித விவாதங்களும் இன்றி நிறைவேற்றப்பட்டு உள்ளன. நாடாளுமன்றக் குழுக்கள் நடைமுறையில் செயலிழந்துவிட்டன என்றே கூற வேண்டும். நாட்டு மக்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட யாரோடும் கலந்தாலோசிக்காமல், கொரோனா பெருந்தொற்று நிகழ்வு காலகட்டத்திலும், பெரும் பொருட்செலவில், இந்த நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு உள்ளது.
நாடாளுமன்றத்தில் இருந்து ஜனநாயகத்தின் ஆன்மா பறிக்கப்பட்டுவிட்ட நிலையில், புதிய கட்டடத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை. புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்க எங்களின் கூட்டு முடிவை அறிவிக்கிறோம். இந்த சர்வாதிகார பிரதமருக்கு எதிராக கடிதத்திலும், உள்ளத்திலும், பொருளிலும் தொடர்ந்து போராட வேண்டும், நாங்கள் அதனை செய்வோம். நமது செய்தியை நேரடியாக இந்திய மக்களுக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணித்து உள்ள 19 எதிர்க்கட்சிகள்: இந்திய தேசிய காங்கிரஸ், திராவிட முன்னேற்ற கழகம், ஆம் ஆத்மி கட்சி, சிவ்சேனா, சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, கேரளா காங்கிரஸ் ( மணி), விடுதலை சிறுத்தைகள் கட்சி, ராஷ்டிரிய லோக் தளம், திரிணாமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தேசிய மாநாட்டுக் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள், புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக, கூட்டாக அறிவித்து உள்ளன.
பிரகலாத் ஜோஷி வேண்டுகோள்: எதிர்க்கட்சிகள், தங்களது இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, வேண்டுகோள் விடுத்து உள்ளார்.