கரோனா தொற்று பாதிப்பின் 2ஆவது அலை, தற்போது இந்தியாவில் அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
அரசியல் கட்சியினர், திரைப் பிரபலங்கள் என, பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். அந்த வரிசையில், உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 80 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, வீடுகளில் இருந்தே நீதிபதிகள் வழக்கை விசாரிக்கும் முறை அமலுக்கு கொண்டு வரப்பபட்டது.
இதன் காரணமாக, எண்ணிக்கையில் குறைவான நீதிபதிகளுடன் அவசர வழக்குகள் மட்டுமே தற்போது விசாரிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 15 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளான நீதிபதிகளில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே, நீதிபதிகள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். அதைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள், ஊழியர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தப் பதிவு செய்துள்ளனர்.
நாளை(ஏப்.23) தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவின் பதவிக் காலம் நிறைவு பெறுகிறது. அவரைத் தொடர்ந்து, என்.வி ரமணா உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏப்.24 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரே நாளில் 2,104 பேர் பலி - இந்தியாவை மிரட்டும் கரோனா