பெங்களூரு: காவிரி நீர்ப் பங்கீடு பிரச்னை காரணமாக கன்னட அமைப்புகள் நாளை கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். கன்னட அமைப்புகளைச் சேர்ந்த வட்டல் நாகராஜ், சாரா கோவிந்து, ப்ரவீன் ஷெட்டி ஆகியோர் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒரு சில அமைப்புகள் தார்மீக ரீதியில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும், கர்நாடகத்தில் நாளை பந்த்தை முன்னிட்டு இன்று இரவு பெங்களூரு செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. காவிரி பிரச்னையில் ஏற்கனவே கடந்த செவ்வாய் அன்று நீர் மேலாண்மைக் குழு தலைமையில், கன்னட அமைப்புகள், தலித் அமைப்புகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட அமைப்புகள் பெங்களூருவில் முழு அடைப்பை கடைபிடித்தனர்.
அந்த பந்த்தின்போது வட்டல் நாகராஜ் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பெங்களூரு வீதிகளில் திறந்த வெளி வாகனத்தில் பேரணி நடத்தினர். கன்னட திரைப்பட சங்கம் இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், திரைப்படத்துறை சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர். ரயில்கள், விமானங்கள், தரை போக்குவரத்து என அனைத்தும் நிறுத்தி வைக்கப்படும் என வட்டல் நாகராஜ் கூறியுள்ளார்.
பெங்களூரு மாவட்ட கன்னட சாஹித்ய பரிஷத் கர்நாடக பந்த்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மாவட்ட காவல் ஆணையரின் வழிகாட்டுதலின்படி, தனியார் பள்ளிகள் நடத்துவது பற்றி முடிவெடுத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. பிஎம்டிசி பேருந்து எப்போதும்போல இயங்கும் என கூறப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும். ஓலா மற்றும் ஊபர் கால் டாக்ஸி நிறுவனத்தின் 1.25 லட்சம் ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்படும். ஓலா ஊபர் சங்கத்தின் தலைவர் தன்வீர் பாஷா, பந்த்திற்கு தாங்கள் முழு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார்.
கர்நாடக சாலைக் கடைகள் சங்கத் தலைவர், ”கர்நாடகத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சாலைக் கடைகள் பந்த்திற்கு ஆதரவு அளித்து அடைக்கப்பட்டிருக்கும்” என கூறியுள்ளார்.
பெங்களூரூவில் 144 தடை: மூத்த போலீஸ் அதிகாரி பி தயானந்த், பந்த் பாதுகாப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “கர்நாடக மாநிலத்தில் பந்த்தை முன்னிட்டு நாளை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 12 மணி முதல் நாளை இரவு 12 மணி வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஃபிரிடம் பார்க்கில் மட்டும் போராட்டத்திற்கு அனுமதிக்கப்படும்.
உச்ச நீதிமன்றம் பந்த் குறித்து தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளது. பொதுச் சொத்திற்கு ஏதாவது சேதம் ஏற்பட்டால், அதற்கு பந்த் நடத்துபவர்களே பொறுப்பு. வலுக்கட்டாயமாக பந்த் கடைபிடிக்க வற்புறுத்தக் கூடாது. கேஸ்ஆர்பி, கார் மற்றும் ஹோம் கார்ட் அமைப்புகள் தவிர, மற்ற அமைப்புகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிரிமினல் வழக்கு பின்னணி உடைய நபர்களை, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக காவலில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த பந்த்தில் பங்கேற்கும் சினிமா நடிகர்கள் குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: Asian Games: நீச்சல் போட்டியில் இறுதி சுற்றுக்குள் நுழைந்தது இந்தியா!