நொய்டா: ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில் நேற்று (ஏப். 16) ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் ஜஹாங்கிர்புரியில் சென்றுகொண்டிருந்தபோது, இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. கல்வீச்சு தாக்குதல் நடந்தது.
இந்த தாக்குதலில் 8 போலீசார் உள்பட 9 பேர் காயமடைந்தனர். குறிப்பாக துணை காவல் ஆய்வாளருக்கு துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கெஜ்ரிவால் காட்டம்: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த கலவரம் குறித்து கூறுகையில், "நாட்டில் உள்ள அனைவரும் அமைதி நோக்கி நகரும்படி வேண்டுகிறேன். அது மட்டுமே நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்லும். தலைநகரை அமைதிப் பூங்காவாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுடையது. இந்த சூழலில், மக்களுக்கு பாதுகாப்பு அளித்து அமைதியை நிலைநாட்டுவது அவசியம்.
இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி காவல் கண்காணிப்பாளர் ராகேஷ் அஸ்தானாவை தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.
இந்த சம்பவயிடத்தில் டெல்லி மேற்கு எம்.பி. ஹான்ஸ் ராஜ் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், " கலவரம் பற்றி அறிந்த பின்பு, என்னால் தூங்க முடியவில்லை, நிலவரத்தை நேரடியாக கண்டு ஆய்வு மேற்கொள்ள வந்தேன்" என்றார். இந்த கலவரம் காரணமாக 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களிடையே நம்பிக்கையும், பாதுகாப்பையும் ஏற்படுத்தும் பொருட்டு காவல்துறை கொடி அணிவகுப்பு நடைபெறஉள்ளது.
இதையும் படிங்க: உ.பி.,யில் அகற்றப்பட்ட மசூதி ஒலிபெருக்கி; இந்து அமைப்பின் எதிர்ப்பு எதிரொலி!