மைசூரு: கர்நாடகா மாநிலம் மைசூரு மாவட்டம் ஹோரலஹல்லா கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. நேற்று (ஜன21) இரவு அதே கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் மலம் கழிக்கத் திறந்த வெளிக்குச் சென்றுள்ளான். நீண்ட நேரமாகியும் சிறுவன் வராததை அடுத்துத் தேடுதல் பணியில் பெற்றோர் ஈடுபட்டனர்.
சிறுவன் காணாமல் போன தகவல் தெரியவந்த நிலையில், ஊர் மக்கள் கிராமம் முழுவதும் தேடத் தொடங்கினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மறுநாள் காலை கிராமத்திற்கு வெளியே 2 கிலோ மீட்டர் தொலைவில் கிடந்த சிறுவனின் சடலத்தை காவல்துறை கைப்பற்றினர்.
சிறுவனின் உடலிலிருந்த காயங்களைக் கொண்டு சிறுத்தை அடித்துக் கொன்றதாக காவல்துறை தெரிவித்தனர். கடந்த 48 மணி நேரத்தில் சிறுத்தையின் அட்டூழியத்தால் அந்த கிராமத்தில் மட்டும் சிறுவனையும் சேர்த்து இருவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்திலிருந்து இதுவரை 4 பேர் அந்த கிராமத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊருக்குள் சுற்றித் திரியும் சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து சிறுவனின் புகைப்படத்தைக் கையில் ஏந்தி சாலை மறியலில் கிராம மக்கள் ஈடுபட்டனர். கிராம மக்கள் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: நடுரோட்டில் வயதான ஆசிரியரை தாக்கிய பெண் காவலர்கள் - பீகாரில் நடந்தது என்ன?