கோவிட்-19 பெருந்தொற்று பலருக்கும் சவாலான சூழலை ஏற்படுத்தியிருந்தாலும், பல நம்பிக்கை கதைகளும் ஆங்காங்கே நிகழ்த்திதான் இருக்கின்றன. உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் அருகேயுள்ள பாக்பேட் பகுதியைச் சேர்ந்த நூறு வயது பாட்டி சார்தார் கவுர் கோவிட்-19 பாதிப்பிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளார்.
அங்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கடமை தவறாமல் வாக்கு செலுத்திவிட்டு வந்த சர்தார் பாட்டிக்கு, அடுத்த சில நாள்களில் கோவிட்-19 தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாட்டிக்கு மட்டுமல்லாது, அவரது குடும்பத்தினர் ஐந்து பேருக்கும் தொற்று பரவியுள்ளது.
பாட்டிக்கு பாதிப்பு ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் பெருந்துயரில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், பாட்டியோ தன்னம்பிக்கையை கைவிடாமல் மன உறுதியுடன் பெருந்தொற்றை எதிர்கொண்டுள்ளார்.
"நான் எனது துடிப்பான வாழ்க்கை முறை, நம்பிக்கை, பாசிட்டிவ் எண்ணங்களால் இந்த கரோனா நோய்த்தொற்று போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளேன். சிகிச்சையின்போது நான் மனம் தளராமல் இருக்க எனது குடும்பத்தினருக்கும் தொடர்ந்து ஊக்கமளித்து வந்தேன்'' என்கிறார், சர்தார் கவுர்.
இதையடுத்து மே 15ஆம் தேதி சர்தார் கவுர் பாட்டிக்கு மீண்டும் பரிசோதனை செய்த போது கோவிட் நெகட்டிவ் ரிசல்ட் வரவே, மீண்டும் பழைய தெம்புடன் வீடு திரும்பியுள்ளார், இந்த நூறு வயது தன்னம்பிக்கை பாட்டி.
இதையும் படிங்க: கேரள அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் மறுப்பு: பின்னணி என்ன?