பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் அமாவாசை என்பதால் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் இருந்தது. அதற்காக, பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோயிலிம் ஒரு பகுதியில் கூட்ட நெரிசலை சீர்செய்யும் பொருட்டு, பெண் காவலர் ஒருவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அந்த காவலரின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக இருந்ததால், அதிகாரிகள் அப்பெண் காவலரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 34 வயதான ரீத்தா என்பதும், காவலர் போல உடை அணிந்து போலி போலீசாக சுற்றித் திரிந்ததும் தெரியவந்தது. மேலும், இவருக்கு காவல் பணியின் மீதுள்ள ஈடுபாட்டினால், இவ்வாறு போலீஸ் உடை அணிந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதாக ரீத்தா தெரிவித்துள்ளார். இந்நிலையில், போலியாக போலீஸ் உடையணிந்து சுற்றித் திரிந்த ரீத்தாவை விசாரித்த ஆனைமலை காவல் நிலைய போலீசார், இனிமேல் இதுபோன்று நடக்கக் கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.