மதுரை: இந்திய அளவில் சரக்கு ரயில்களை வேகமாக இயக்குவதில் மதுரை ரயில்வே கோட்டம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதன்படி, கடந்த நிதியாண்டில் சரக்கு ரயில்களை மணிக்கு 38.62 கி.மீ. வேகத்தில் இயக்கி இந்திய அளவில் முதன்மை கோட்டமாக இருந்து வந்த நிலையில், தற்போதும் கடந்த செப்.15 வரை சரக்கு ரயில்களின் வேகம் மணிக்கு 40.45 கி.மீட்டராக உயர்ந்து தொடர்ந்து இந்திய அளவில் முதன்மை கோட்டமாக சாதனை புரிந்து வருகிறது.
இதற்காக, சரக்கு ரயில்களின் சராசரி வேகத்தில் பயணிகள் ரயில்களுக்கு வழி விடுவதற்காக நிறுத்தி வைக்கும் காலம், சரக்கு ரயில் கட்டமைக்கும் நேரம் போன்றவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதேபோல், பயணிகள் ரயில்களையும் இந்த நிதியாண்டில் 168 நாட்களில் 108 நாட்கள் 100% காலம் தவறாமல் இயக்கி சாதனை புரிந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக, நேற்று நடந்த கோட்ட ரயில்வே மேலாளரின் வார பாதுகாப்பு கூட்டத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.