விழுப்புரம்: கண்டாச்சிபுரத்தில் உள்ள சித்தேரிப்பட்டு காலனியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி ஒன்று கட்டப்பட்டது. கடந்த சில மாதங்களாக குடிநீர் தேக்கத்தொட்டி பலவீனமடைந்தும், உரிய பராமரிப்பு இல்லாமல் இருந்த நிலையில் அதனை சீரமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வந்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
இந்நிலையில் நேற்று மதியம் சற்றும் எதிர்பாரா விதமாக குடிநீர் தொட்டியின் தூண்கள் இடிந்து விழத்தொடங்கியது. அதிர்ஷ்டவசமாக யாரும் கீழே இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த வந்த அரசு அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் இடிந்து விழுந்த நீர் தேக்கத்தொட்டியை முழுவதுமாக இடித்து, மேலும் உடைந்து விழும் அபாயத்தை தவிர்த்தனர். அரசு உடனடியாக அதே இடத்தில் தரமான குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைத்துத் தர வேண்டும் என சித்தேரிப்பட்டு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.