விருதுநகர்: சிவகாசியில் உள்ள வடக்கு ரத வீதியில் செண்பகராஜன் என்பவருக்குச் சொந்தமான ஜவுளிக்கடை இயங்கி வருகிறது. இந்நிலையில், வழக்கம் போல நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவில் பணி முடிந்து தொழிலாளர்கள் கடையை மூடிவிட்டுச் சென்றுள்ளனர்.
பின்னர், இன்று காலை கடையை திறக்கும் பொழுது கடை முழுவதும் கரும்புகையுடன் காட்சியளித்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், இது குறித்து உடனடியாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் பேரில் இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பின்பு உள்ளே சென்றனர். அப்போது மின் கசிவு காரணமாக ஏசியில் தீ விபத்து ஏற்பட்டதை கண்டுபிடித்துள்ளனர். பின்னர், உடனடியாக நுரை மூலமாக புகையை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.