ஆக்கிரமிப்பு பகுதியில் அழகான வீடு.. இடித்து தள்ளிய நகராட்சி நிர்வாகம்! - UNAUTHORIZED BUILDING DEMOLISH
🎬 Watch Now: Feature Video
Published : Jul 2, 2024, 9:26 PM IST
நீலகிரி: குன்னூர் புரூக்லேன்ட்ஸ் பகுதியில் நகராட்சி சார்பாக கடந்த 1985ஆம் ஆண்டு வீடு கட்ட நிலங்கள் வழங்கப்பட்டது. அப்போது, ஓடையோரம் நகராட்சி பூங்கா அமைப்பதற்காக குறிப்பிட்ட இடம் வழங்கப்பட்டது. இந்நிலையில், அந்த இடத்தை நாகர்கோயிலைச் சேர்ந்த ஜான் பிரிட்டிஸ் வினில் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து, வீடு கட்டி இருக்கிறார் என அவருக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஜான் பிரிட்டிஸ் 2017ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்ந்து ஏழு ஆண்டுகளான நிலையில், இன்று உயர் நீதிமன்றம் கட்டிடத்தை இடிக்க உத்தரவு பிறப்பித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில், இன்று குன்னூர் வட்டாட்சியர் கனிசுந்தரம் தலைமையில் வருவாய்த் துறையினரும், நகராட்சி அதிகாரிகளும் காவல்துறை உதவியுடன் பொக்லைன் இயந்திரம் மூலம் கட்டிடத்தை இடிக்கும் பணி துவங்கியது. இச்சம்பவம் இடத்தில் செய்தியாளரைச் சந்தித்த அதிகாரிகள் கூறுகையில், இந்த பகுதியில் இதேபோல் பல ஆக்கிரமிக்கப்பட்ட கட்டடங்கள் உள்ளது. எனவே, இதே போல் அந்த கட்டடங்களும் கூடிய விரைவில் அகற்றப்படும் என்று தெரிவித்தனர்.