ஸ்ரீரங்கம் தைத் தேரோட்டம்: விண் அதிர்ந்த பக்தர்களின் ரங்கநாதா.. கோவிந்தா.. முழக்கம்! - பூலோக வைகுண்டம்
🎬 Watch Now: Feature Video
Published : Jan 24, 2024, 1:40 PM IST
திருச்சி: 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் வருகை புரிந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோயிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஶ்ரீரங்கம் கோயிலில் வருடத்தில் மூன்று தேரோட்டங்கள் நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் ராமரின் புனர்பூச நட்சத்திரத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை தேரோட்டமானது நடைபெறும். அந்த வகையில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கிய தைத்தேர் உற்சவத்தில் நாள்தோறும் ரங்கநாதர் யாளி வாகனம், கருட வாகனம், யானை வாகனம், தங்க குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் ஆலயத்திற்கு வருகை தந்த முதல் நாள் தங்க கருட சேவையும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிலையில் இன்று முக்கிய திருவிழாவான தைத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ரங்கநாதா, கோவிந்தா, ரங்க பிரபு, காவிரி ரங்கா என கோஷங்களுடன் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திருத்தேரின் வடம் பிடித்து இழுத்தனர். ஸ்ரீரங்கத்தை பொறுத்தவரை ரங்கநாதர் உபய நாச்சியார்களுடன் தைத்தேரில் மட்டுமே எழுந்தருளுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.