கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு.. ஆற்றங்கரையில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்பு! - Kumbakkarai Falls
🎬 Watch Now: Feature Video
தேனி: கும்பக்கரை அருவியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஆற்றுப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மறு கரையில் தஞ்சமடைந்த நிலையில், அவர்களை காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு கீழ் உள்ள ஆற்றுப்பகுதியில் கீழ வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள் மற்றும் நான்கு பெண்கள் என 9 நபர்கள் குளித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது, கும்பக்கரை அருவி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆற்றுப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் குழந்தைகளுடன் மறு கரையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பெரியகுளம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், மறுகரைக்கு கயிறு கட்டி ஆற்றைக் கடக்க செய்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, மீட்கப்பட்ட நபர்களுக்கு காயங்கள் மற்றும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதித்து, பின்னர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டிருந்தது.