Live: உலகின் முதல் ஜல்லிக்கட்டு மைதானம் திறப்பு.. மதுரை கீழக்கரையில் இருந்து நேரலை!
🎬 Watch Now: Feature Video
மதுரை: அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உலகின் முதல் ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் உரையாற்றி வருகிறார் அதன் நேரலை காட்சிகள்..
அலங்காநல்லூரில் பிரம்மாண்ட ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வரங்கத்திற்கு "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நிலையில் ரூ.62 கோடி 77 லட்சத்து 62 ஆயிரம் நிதி ஒதுக்கீட்டில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இன்று அதன் திறப்பு விழா நடைபெற்றது.
ஒரே நேரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அமரும் வசதிகளுடன் மூன்றடுக்கு பார்வையாளர் மாடம், ஏறுதழுவுதல் நடைபெறும் இடம், மிக முக்கிய விருந்தினர்கள் அமரும் இடம், ஏறுதழுவுதலில் பங்குபெறும் காளைகளின் எழுச்சி வடிவங்களைப் புலப்படுத்தும் அருங்காட்சியகம், ஒலி - ஒளி காட்சிக்கூடம், கால்நடை மருந்தகம், நூலகம், மாடுபிடி வீரர்களுக்கான தங்கும் அறைகள் என அனைத்தையும் உள்ளடக்கி 83 ஆயிரத்து 462 சதுரடி பரப்பளவில் இவ்வரங்கம் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஏறு தழுவும் அரங்கத்தை திறந்து வைத்தார். திறப்பு விழாவையொட்டி, முதல் நாளான இன்றே ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கப்பட்டு மிக உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இதில் வாடிவாசலில் இருந்து சீறிப் பாயும் காளைகளின் திமிலைப் பிடித்து பரிசை அள்ளிச் செல்வதற்காக காளையர்கள் போட்டிப் போட்டுக்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
மேலும் இதில் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளை உரிமையாளருக்கு முதல் பரிசாக ரூ.12 லட்சம் மதிப்புள்ள ஜீப் பரிசாக வழங்கப்பட உள்ளது. 2ஆம் இடம் பெறும் காளை உரிமையாளர் மற்றும் மாடுபிடி வீரருக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்படுகிறது. இது தவிர, ரொக்கமாக முதல் பரிசுக்கு ரூபாய் ஒரு லட்சமும் இரண்டாவது பரிசுக்கு ரூபாய் 75 ஆயிரம் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.