அடிப்படை வசதியில்லாத ஜெகதளா பேரூராட்சி? தேர்தலை புறக்கணிப்போம் என நீலகிரி கலெக்டரிடம் மனு - jagathala town Panchayat
🎬 Watch Now: Feature Video
Published : Mar 5, 2024, 10:11 AM IST
நீலகிரி: குன்னூர் ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டு பகுதியில், தங்கள் பகுதிக்கு இதுவரை எந்தவிதமான அடிப்படை வசதியும் செய்து தரவில்லை எனவும், வார்டு உறுப்பினர் பொதுமக்களின் குறைகளை செவிசாய்த்துக் கேட்காமல் மெத்தனப்போக்காக இருந்து வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்
இந்நிலையில், தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி, நேற்று (மார்ச் 4) நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரிடம் தங்களது பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தராததைக் கண்டிக்கும் விதமாக, வருகிற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதியினர், "ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டு பகுதி மக்களான எங்களுக்கு, இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.
இது குறித்து வார்டு உறுப்பினரிடம் தெரிவித்தாலும், எங்களின் குறைகளுக்கு அவர் செவிசாய்க்க மறுக்கிறார். ஆகையால், இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டிக்கும் வகையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளோம்" எனத் தெரிவித்தனர்.