நெல்லையப்பர் கோயில் பத்ரதீபத் திருவிழா.. ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் தங்க விளக்கு தீபம்!
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் திருக்கோயிலில், ஆண்டுதோறும் தை அமாவாசையை முன்னிட்டு, 3 நாட்கள் பத்ரதீபத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நேற்றைய முன்தினம், சிறப்பு யாகசாலை பூஜைகளுடன் திருவிழா தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று (பிப்.8) அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ஏற்றப்படும் தங்க விளக்கு, கோயில் கருவூலத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு, சுவாமி மூலஸ்தானத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மூலஸ்தானத்தில் இருந்து சுடர் எடுத்து தங்க விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா பத்ரதீபம், இன்று (பிப்.9) மாலை சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள தங்கக் கொடிமரம் முன்பு நடைபெறுகிறது. இதில், கோயில் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விளக்குகள் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில், சுப்பிரமணியர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும்.