கபோரோன்: வைரம் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா விளங்குகிறது. உலகின் மொத்த வைர உற்பத்தியில் சுமார் 20 சதவீதம் இங்கு உற்பத்தியாகிறது. இந்த நிலையில், போட்ஸ்வானாவில் உள்ள கனடா நாட்டைச் சேர்ந்த லூகாரா டைமண்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு சுரங்கத்திலிருந்து சுமார் 2,492 காரட் வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரம்: 1905-ல் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 3,106 காரட் 'கலினன் வைரம்' (Cullinan Diamond) உலகின் மிகப்பெரிய வைரமாக உள்ளது. இதனை அடுத்து, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய வைரமாக 'போட்ஸ்வானா வைரம்' (Botswana Diamond) கருதப்படுகிறது. ஆகவே, இந்த போட்ஸ்வானா வைரமே உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரம் என்று லூகாரா டயமண்ட் நிறுவனத்தின் தலைவர் வில்லியம் லாம்ப் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், பெரிய அளவுடைய மற்றும் அதிக மதிப்புள்ள வைரங்களை அடையாளம் காணவும், பாதுகாக்கவும் 2017ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மெகா டயமண்ட் ரெக்கவரி (MDR) என்ற நிறுவனத்தின் எக்ஸ்ரே டிரான்ஸ்மிஷன் (XRT) தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே இந்த 'போட்ஸ்வானா வைரம்' கண்டறியப்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எக்ஸ்ரே டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பம்: கனடா நாட்டைச் சேர்ந்த லூகாரா டைமண்ட் நிறுவனம் 2012ஆம் ஆண்டில் போட்ஸ்வானாவில் வைர சுரங்கத்தை தொடங்கியது. அதன் பின்னர், 216 வைரங்களை ஒவ்வொன்றும் தலா 1 மில்லியன் டாலருக்கும் அதிகமாகவும், 11க்கும் மேற்பட்ட ஒற்றை வைரங்கள் ஒவ்வொன்றும் தலா 10 மில்லியன் டாலருக்கும் அதிகமாகவும் விற்பனை செய்துள்ளனர்.
அந்த வகையில், 2019ஆம் ஆண்டில் கரோவ் சுரங்கத்தில் லுகாராவால் 1,758 காரட் மதிப்புடைய வைரம் ஒன்று கண்டறியப்பட்டது. இதுவே போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய முதல் வைரமாகும். அதற்கு 'செவிலோ வைரம்' (Chevilo Diamond) என்று பெயரிடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, மெகா டயமண்ட் ரெக்கவரி நிறுவனத்தின் எக்ஸ்ரே டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 2021ஆம் ஆண்டில் போட்ஸ்வானாவில் 1,174 காரட் வைரக்கல்லை லூகாரா கண்டுபிடித்தது. இந்த வரிசையில் தற்போதும் அதே எக்ஸ்ரே டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 2,492 காரட் மதிப்புடைய போட்ஸ்வானா வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லுகாராவை வாழ்த்திய போட்ஸ்வானா ஜனாதிபதி: லூகாரா டயமண்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான போட்ஸ்வானா சுரங்கத்தின் நிர்வாக இயக்குநர் நசீம் லஹ்ரி, கடந்த வியாழன் அன்று போட்ஸ்வானாவின் ஜனாதிபதி மொக்வீட்சி மசிசியிடம், உள்ளங்கையின் அளவுள்ள ஒளி ஊடுருவக்கூடிய போட்ஸ்வானா வைரக்கல்லை வழங்கியுள்ளார்.

அப்போது இந்த வைரம் குறித்து விளக்கிக் கூறிய நசீம் லஹ்ரி, "இதுவரை போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வைரம் என்றும், உலகிலேயே இரண்டாவது வைரம் என்றும்" தெரிவித்துள்ளார். இதனை கேட்ட ஜனாதிபதி மொக்வீட்சி மசிசி, "இது விலைமதிப்பற்றது" என்று கூறி, லூகாரா டயமண்ட் நிறுவனத்திற்கு தனது வாழ்த்தை தெரிவித்தார்.
40 மில்லியன் டாலர்கள்: போட்ஸ்வானா தலைநகர் கபோரோனில் இருந்து வடக்கே சுமார் 500 கி.மீ. தொலைவில் உள்ள கரோவ் சுரங்கத்தில் இருந்தே இந்த போட்ஸ்வானா வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த வைரத்தின் தரம் மற்றும் மதிப்பு பற்றிய விவரத்தை லூகாரா டயமண்ட் நிறுவனம் தெரிவிக்கவில்லை. இருந்தபோதிலும், இதன் மதிப்பு 40 மில்லியன் டாலர்கள் வரை இருக்கலாம் என செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் கைது.. காரணம் என்ன?