ஹைதராபாத்: வாட்ஸ் அப் (Whatsapp), ஃபேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) உள்ளிட்ட ஆன்லைன் ஆப்-களின் தாய் நிறுவனமான மெட்டா, எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான X வலைத்தளத்திற்கு (Formerly Twitter) போட்டியாக கடந்த 2023ஆம் ஆண்டு த்ரெட்ஸ் (Threads) என்னும் டெக்ஸ்ட் மற்றும் போட்டோ அடிப்படையிலான ஆப்-ஐ களம் இறக்கியது. இது மெட்டாவிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, த்ரெட்ஸ் பயன்பாட்டிற்கு வந்த முதல் ஐந்து நாட்களுக்குள், அதனை 100 மில்லியன் மக்கள் டவுன்லோட் செய்தனர். ஆனால், கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து இதன் தினசரி டவுன்லோடானது வீழ்ச்சியையேச் சந்தித்து வந்தது. இந்நிலையில், 2023ஆம் ஆண்டு இறுதியான டிசம்பர் மாதத்தில் த்ரெட்ஸின் வளர்ச்சி உச்சத்தை எட்டியுள்ளது.
அதாவது, டிசம்பரில் 12 மில்லியன் புதிய டவுன்லோட்களை த்ரெட்ஸ் ஆப் பெற்றுள்ளது. அந்த வகையில், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் (Apple App Store) டவுன்லோடுகளின் அடிப்படையில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளதாக, பயன்பாட்டு நுண்ணறிவு நிறுவனமான (App Intelligence) ஆப் ஃபிகர்ஸ் (App figures) நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், இது கூகுள் ப்ளே ஸ்டோரில் (Google Play Store) முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது.
அதன்படி, ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் 12 மில்லியன் டவுன்லோட்களைப் பெற்று 4வது இடத்தையும், கூகுள் பிளே ஸ்டோரில் 16 மில்லியன் டவுன்லோட்களைப் பெற்று உலக அளவில் 8வது இடத்தையும் பிடித்துள்ளது. அந்த வகையில், இரண்டு ஆப் ஸ்டோர்களின் தரவின் அடிப்படையில், த்ரெட்ஸ் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட 6வது ஆப் என்ற இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும், கடந்த டிசம்பர் மாதம் டவுன்லோட்களின் அடிப்படையில் முதல் 10 இடத்திற்குள் த்ரெட்ஸ் நுழைந்திருந்தாலும், அதனால் முதல் 5 இடத்திற்குள் நுழைய முடியவில்லை. இருப்பினும் அதன் தாய் ஆப் ஆக கருதப்படும் இன்ஸ்டாகிராம், அதனை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது.
அதாவது, கடந்த டிசம்பரில் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோரில் மட்டும் 54 மில்லியன் பேர் இன்ஸ்டாகிராமை டவுன்லோட் செய்துள்ளனர். அதன்படி, டிசம்பரில் அதிக டவுன்லோட்களைப் பெற்ற ஆப் ஆக இன்ஸ்டாகிராம் மாறியுள்ளது. இந்த நிலையில், த்ரெட்ஸின் போட்டியாக இருக்கும் X வலைத்தளம், அதன் பெயர் மாற்றத்தினாலேயே இன்னும் சிக்கல்களைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், பயன்பாட்டு நுண்ணறிவு நிறுவனமான ஆப் ஃபிகர்ஸ்-இன் படி, X வலைத்தளம் டிசம்பரில் வெறும் 8.5 மில்லியன் டவுன்லோட்களை மட்டுமே பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், இது ஆப் ஸ்டோரில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட 29வது ஆப்-ஆகவும், கூகுள் பிளே ஸ்டோரில் 46வது இடத்திலும் உள்ளது.
இந்நிலையில், மெட்டா நிறுவனரும், அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க், த்ரெட்ஸ் இறுதியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பயனாளிகளுக்கும் கிடைக்கப் போகிறது என கடந்த மாதம் அறிவித்தார். அதாவது, ஐரோப்பாவில் உள்ள 448 மில்லியனுக்கும் அதிகமான மக்களை த்ரெட்ஸ் சென்றடைவதற்கான வாய்ப்பாக இது இருக்கும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பட்ஜெட்டில் எதிரொலித்த முத்தலாக், 33% மகளிர் இடஒதுக்கீடு... தேர்தல் தொலைநோக்கா? மகளிர் நலன் கருதியா?