சென்னை: பொதுவாக ஒரு மனிதரில் இருந்து மற்றொரு மனிதனை வேறுபடுத்தி காட்டுவது அர்களது உடல் வேறுபாடுகள், முக சாயல், கை விரல் ரேகைகள் ஆகியவை. ஒரு மனிதனின் ரேகை மற்றொருவருடன் இருந்து மாறுபட்டு இருக்கும். இதனை பயன்படுத்தி பல தொழில் நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நம் ஸ்மார்ட் போன்களை திறப்பதற்கு, லாக்கர்களை திறப்பதற்கு, ரேஷன் கடைகளில் தொடங்கி வங்கிகள் உள்ளிட்ட பல நிறுவனங்களில் கூட பாதுகாப்பிற்காக விரல் ரேகைகள் மூலம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னை ஐஐடியில் பயன்பாட்டு இயக்கவியல் மற்றும் உயிரியல் மருத்துவ பொறியியல் துறையில் ஆராய்ச்சி மாணவராக இருந்து வரும் முகேஷ் என்பவர் மனித மூச்சுக் காற்றிலும் இது போன்ற தனித்துவ அடையாளத்தை உருவாக்க முடியும் என்கிறார். இந்த புதிய கண்டுபிடிப்பு மருத்துவத்துறையிலும் மிகுந்த உதவியாக இருக்கும் என கூறியுள்ளனர்.
இந்த தொழில்நுட்பத்தை பயன்பாட்டு ரீதியாக உருவாக்கும் போது, மனிதன் விடும் மூச்சுக் காற்றின் தரவுகளின் அடிப்படையில், செல்போன்களை அன்லாக் செய்வது, கதவுகளை திறப்பது உள்ளிட்ட பயோமெட்ரிக் பயன்பாடுகளுக்கு இந்த புதிய கண்டுபிடிப்பை பயன்படுத்தலாம் என அவர் கூறுகிறார்.
இது குறித்து ஐஐடியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் தொடர்புத் துறையின் முதல்வரும், அப்ளைடு மெக்கானிஸ் துறையின் பேராசிரியருமான மகேஷ் பஞ்சக்னுலா கூறுகையில், “மனிதன் சுவாசிக்கும் போது நுரையீரலில் இருந்து எக்ஸ்ட்ரா டோராசிக் ஜாமெட்ரி என்பதன் வழியாக (extrathoracic geometry) காற்று வெளியேறும். இந்த எக்ஸ்ட்ரா டோராசிக் ஜாமெட்ரியில் ஒவ்வொரு மனிதனுக்கும் சின்ன சின்ன வித்தியாசங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதில் இருந்து வரக்கூடிய காற்றில் வேக ஏற்ற இறக்கங்கள் (velocity fluctuations) இருக்கும்.
இந்த வேகம் ஏற்ற இறக்கங்களின் அமைப்புகளில் உள்ள வேறுபாடுகளை வைத்து ஒரு மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனை அடையாளம் காண்பது சாத்தியம் என்பதை இந்த ஆய்வின் மூலம் காண்பித்துள்ளோம். இதில் மனிதனை அடையாளம் காண இருவேறு சோதனைகளை செய்யப்பட்டுள்ளன. ஒன்று, பயனர் உறுதிப்படுத்தல் சோதனை (user confirmation test) எடுத்துக்காட்டாக இந்த சோதனையில் ஒருவர் “நான் மகேஷ்” என கூறினால் அந்த மென்பொருள் (software) ஆம் அவர் மகேஷ் தான் என்பதை உறுதிபடுத்தும். இந்த சோதனையில் 97% வெற்றியை காண்பித்துள்ளோம். மற்றொன்று பெயரை கூறாமலே யார் என கண்டு பிடிக்கும் முறை. அதில் 50 % வெற்றியை காண்பித்துள்ளோம்.
இதனை மேலும் மேம்படுத்த சில யோசனைகள் உள்ளது. அது சாத்தியமானால் கைரேகை சோதனை, முகத்தை வைத்து அடையாளம் காணுதல், கருவிழி ஸ்கேன் உள்ளிட்டவை போல இதையும் பயன்படுத்தலாம். தொழில்நுட்பத்தை பொருத்தவரை இதை உபயோகப்படுத்த மனிதன் உயிரோடு இருக்க வேண்டியது கட்டாயம் என்பதால், அதற்கான சான்றாகவும் இதனை பயன்படுத்தலாம் என்கிறார்.
மேலும் இவற்றை மருத்துவத்துறையிலும் உபயோகிக்க முடியும். சுவாசப்பிரச்னை உள்ளவர்களுக்கு Inhalation therapy அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மருந்துகள் நேரடியாக சுவாசக்குழாய்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் சுவாசப்பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வரும் தனிநபருக்கேற்ப மருந்து அளவுகளை தீர்மானித்து கொடுக்க இந்த தொழில் நுட்பம் உதவலாம்” என கூறியுள்ளார். இனி பேசவே வேண்டாம் சும்மா ஊதித் தள்ளினாலே நினைத்தது நடக்கும் எனும் தொழில்நுட்பம் நாளை உங்கள் கைகளில் தவழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதையும் படிங்க: உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு நீக்கம் - யுஜிசி அறிவிப்பிற்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு!