வாஷிங்டன்: டெல்லியைச் சேர்ந்த கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரி மாணவர் அணியும், மும்பையைச் சேர்ந்த கனகியா இண்டர்நேஷனல் பள்ளி மாணவர் அணியும் நாசாவின் மனித ஆய்வு ரோவர் சவால் விருதுகளை பெற்றுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா சார்பில் நடத்தப்படும் மனித ஆய்வு ரோவர் சவால் (Human Exploration Rover Challenge - HERC) போட்டி ஒரு பொறியியல் வடிவமைப்பு சவாலைக் கொண்டு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு நடத்தப்பட்ட போட்டியில், 2 உலகம் முழுவதிலும் இருந்து 72 அணிகள் என 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
அமெரிக்கா, இந்தியா உள்பட 13 நாடுகளைச் சேர்ந்த 42 கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் 30 உயர்நிலை பள்ளிகள் இப்போட்டியில் பங்கேற்றன. இப்போட்டியின் நிறைவு விழா ஏப்.19 மற்றும் ஏப்.20 ஆகிய தேதிகளில் லபாமாவின் ஹண்ட்ஸ்வில்லில் உள்ள நாசாவின் மார்ஷல் விண்வெளி விமான மையத்திற்கு அருகில் நடைபெற்றது.
நாசாவின் இன்ஜினியர்களுடன் இணைந்து பல பாதுகாப்பு மற்றும் வடிவமைப்பு மதிப்பாய்வுகளை முடித்ததன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்ட நிலையில், டெல்லியைச் சேர்ந்த கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி மனித ஆய்வு ரோவர் போட்டியில் க்ராஷ் அண்ட் பர்ன் Crash and Burn பிரிவில் விருதை பெற்றுள்ளது என நாசா அறிவித்துள்ளது. மேலும், மும்பையைச் சேர்ந்த கனகியா இண்டர்நேஷனல் பள்ளிக்கு ரூக்கி ஆஃப் தி இயர் என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, நாசாவின் மனித ஆய்வு ரோவர் சவால் செயல்பாட்டை வழிநடத்தும் வெமித்ரா அலெக்ஸாண்டர் கூறுகையில், “நாசாவின் மனித ஆய்வு ரோவர் சவால் இளம் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை ஊக்குவிக்கும் ஒரு தளமாக செயல்படுகிறது. இது மாணவர்களுக்கு அறிவியல் அனுபவங்களை வழங்குவது மட்டுமில்லாமல், புதுமையான சிந்தனையை வளர்க்க உதவுகிறது” என்று கூறினார்.
இதையும் படிங்க: விண்வெளி சுற்றுப்பயணம் செல்லும் முதல் இந்தியர்! யார் இந்த கோபிசந்த் தொடகூரா? ஜெப் பெசாஸின் ப்ளூ ஆர்ஜின் சாதிக்குமா? - Gopichand Thotakura