சென்னை: நவீனமயமான உலகில் இணையத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் இணைய வழி மோசடிகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. 2024ஆம் ஆண்டு தொடங்கி ஐந்து மாதங்கள் ஆகியுள்ள நிலையில், கடந்த 4 மாதங்களில் இந்தியர்களிடம் மட்டும் 36.74 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சைபர் ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு தொடங்கி 4 மாதங்களில் ஆயிரத்து 26 சைபர் கிரைம் புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. முதலில் ஏடிஎம் கார்டில் உள்ள 16 எண்களை கூறுங்கள் எனக் கூறி, பேங்க் அக்கவுண்ட்டில் உள்ள பணத்தை அபகரித்து வந்தனர். அதன் பின் கிரிப்டோ கரன்சியில் முதலீடு, பகுதி நேர அல்லது முழு நேர வேலை வாங்கித் தருவதாக கூறியும் பணப்பறிப்பு செயல்களும் நடைபெற்று வந்தன.
தற்போது சைபர் கிரைமில் ஈடுபடும் நபர்கள், தங்களை அரசாங்க அதிகாரிகள் என்று கூறி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். பல இந்தியர்கள் இந்த ஆன்லைன் மோசடி மூலம் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். ஃபெடெக்ஸ் கூரியர் ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள், மத்திய புலனாய்வு (CBI), தேசிய புலனாய்வு முகமை (NIA), இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிகாரிகள் போல கால் செய்து பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
கூரியர் மோசடி: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த ரவி என்பவருக்கு ஒரு கால் வந்துள்ளது. மறுமுனையில், “மிஸ்டர் ரவி. இது கஸ்டம்ஸ். உங்கள் பெயரில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் அடங்கிய பார்சல் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம். சிபிஐ சம்பந்தப்பட்டது. விசாரணைக்கு நீங்கள் ஒத்துழைக்கவில்லை என்றால், கைது செய்யப்படுவீர்கள்” என்று ஒருவர் கூறியுள்ளார்.
தான் எந்த கூரியரும் யாரும் அனுப்பவில்லையே, அப்படியிருக்க என்னுடைய பெயர், முகவரி, பிற தனிப்பட்ட விவரங்களை சரியாக கூறுகிறார்களே, என்ன நடக்கிறது என்று ரவி எண்ணிக் கொண்டிருக்கையில், மற்றொரு அழைப்பு. இந்த முறை வீடியோ கால். அதில், சீருடை அணிந்திருந்த அவர் தன்னை ஒரு சிபிஐ அதிகாரி என ரவியிடம் தெரிவித்துள்ளார். ரவி போதைப்பொருள்களை கூரியரில் அனுப்பியதாக குற்றம் சாட்டிய அவர், அவரது கூற்றுக்கு ஆதரவான போலி ஆவணங்களை ரவியிடம் காட்டியுள்ளார்.
பதற்றத்தில் ரவி, இதற்கு ஒரு தீர்வைக் கேட்க, கைது செய்யாமல் இருக்க 99 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு சம்மதித்து ரவி பணத்தை அனுப்பிய பின், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். அதன் பின், சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். ரவி மட்டுமல்லாமல், ஒரு பேராசிரியர் 45 லட்சம் ரூபாயும், தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து 80 லட்சம் ரூபாயும் சைபர் கிரைமில் மோசடி செய்துள்ளனர்.
மோசடியில் ஈடுபடுபவர்கள் தாங்கள் விரும்பிய பணம் கிடைக்கும் வரை பாதிக்கப்ப்பட்டவர்களை தொடர்பு கொள்கிறார்கள். அவர்கள் மிக நுணுக்கமாக மோசடியில் ஈடுபடுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் அளித்தால் பணத்தை நிறுத்தி, குற்றவாளிகளையும், குற்றங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம் என இணைய பாதுகாப்பு பணியகம் (Cyber Security Bureau) ஷிகா கோயல் கூறியுள்ளார்.
மோசடியில் ஈடுபடுபவர்கள் பாதிக்கபட்டவர்களை எப்படி நம்ப வைக்கிறார்கள்?
முதல் கால்: பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரங்களையும் சேகரித்த பின்னர், பாதிக்கப்பட்டவர்களுக்கு கால் செய்கின்றனர். ஆகவே கால் செய்தவுடன், பாதிக்கப்பட்டவரை அவரின் பெயரைக் குறிப்பிட்டே அழைக்கின்றனர். இது பாதிக்கப்பட்டவருக்கு ஒரு நம்பிக்கையை அளிக்கும்.
மேலும், பாதிக்கப்பட்டவரிடம், “FedEx கூரியர் மூலம் நீங்கள் அனுப்பிய பார்சலில் போதைப்பொருள், தோட்டாக்கள், கைத்துப்பாக்கிகள் இருந்தது. அவை ஸ்கேன் செய்யும் போது சிக்கியது. சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள்” என்று கூறுகின்றனர்.
இரண்டாவது கால்: இதற்கு பின் சில நிமிடங்களிலேயே, ஸ்கைப்பில் வீடியோ கால் வருகிறது. அதில் சீருடை அணிந்த போலி அதிகாரி, பாதிக்கப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், விசாரணைக்கு மும்பை வரவேண்டும் என்றும் கூறுகின்றனர். வர முடியாது என்று கூறினால், கைது செய்வார்கள். கைது செய்தால், ஜாமீன் கிடைக்காது என்றும் மிரட்டுகின்றனர்.
மூன்றாவது கால்: இதனைத் தொடர்ந்து மூன்றாவதாக கால் செய்து, போலி ஆவணங்களைக் காட்டி பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை யோசிக்க விடாமல், தொடர்ந்து கால் செய்து ஆவணங்களைக் காட்டி, நம்பும் விதமாக பேசுவதால், பாதிக்கப்பட்டவர்கள் அதை நம்புகின்றனர். கைது செய்யப்படாமல் இருக்க வேண்டுமானால் குறிப்பிட்ட பணத்தை கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறுவதால், பாதிக்கப்பட்டவர்கள் பதற்றத்தில் இதற்கு ஒப்புக் கொள்கின்றனர்.
கூரியர் மோசடி குறித்து போலீசார் கூறுவது: இந்த கூரியர் மோசடி குறித்து போலீசார், “எந்த அரசாங்க ஏஜென்சியில் இருந்தும் யாருக்கும் வீடியோ கால் செய்வதில்லை. எனவே, யாராவது வீடியோ கால் வாருங்கள், உங்களது வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் என்று கூறினால், அது உண்மையல்ல. நாட்டில் உள்ள எந்த புலனாய்வு நிறுவனமும் வீடியோ கால் மூலம் எந்த வாக்குமூலத்தையும் பதிவு செய்யாது. எனவே, யாரும் நம்ப வேண்டாம்.
ஒவ்வொரு நாளும் 1930 என்ற ஹெல்ப் லைன் எண்ணில் இருந்து, எங்களுக்கு 20 முதல் 30 அழைப்புகள் வருகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு கோடி ரூபாய் மோசடி நடக்கிறது. சில நாட்களுக்கு முன்பு, ஒரு நபருக்கு இது போல் மோசடி கால் வந்துள்ளது. அவர் உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு தகவல் கொடுத்ததால், அவரது பணம் காப்பாற்றப்பட்டது” என்று கூறுகின்றனர்.
சைபர் குற்றங்களை எவ்வாறு தடுப்பது?:
- தெரியாத லிங்குகளை க்ளிக் செய்யாதீர்கள்
- நீங்கள் குற்றம் செய்ததாக ஒருவர் கூறுவதை ஒப்புக்கொள்ள வேண்டாம்.
- நீங்கள் பணத்தை இழந்தால், உடனடியாக 1930 என்ற சைபர் உதவி எண் அல்லது https://www.cybercrime.gov.in/Webform/Crime_AuthoLogin.aspx என்ற இணையதளத்தில் அல்லது அருகில் இருக்கும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள்.
இதையும் படிங்க: பெண்களே உஷார்! மும்பை மாடலிங் என இன்ஸ்டாகிராமில் மோசடி..விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!