சென்னை: சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் ஆற்றலை மின்சாரமாக மாற்றி சரியான முறையில் பயன்படுத்தும்போது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பும் ஏற்படுத்தாது, அதிக செலவினங்களும் ஏற்படாது. ஆகவே, சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் அதிக முக்கியத்துவம் அளித்து வருவதோடு, இதனை மக்கள் முன்னெடுக்க வேண்டும் என்பதற்காக அரசு சார்பில் மானியங்களும் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், மத்திய அரசு நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் சூரிய மின்சக்தி குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், "சூரிய மின்சக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியாக, வீடுகளின் மேற்கூரைகளில் சோலார் பேனல்களை பொருத்துவதன் மூலமாக, ஒரு கோடி வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டம் ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்" என்று அறிவிக்கப்பட்டது.
இதன் தொடச்சியாக, வீட்டின் கூரை மீது சோலார் பேனல்கள் பதிப்பதற்காக தமிழக மக்கள் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து சுமார் 35,000க்கும் மேல் விண்ணப்பங்களை, தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திடம் (TANGEDCO) சமர்ப்பித்துள்ளனர். இதன் மூலம் சோலார் மின் திட்டம் மீதான ஆர்வம் தமிழக மக்கள் மத்தியில் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#RoofTopSolar | உங்கள் வீட்டிற்கு சூரிய மேற்கூரை மூலம் சூரிய ஒளியின் பரிசை கொடுங்கள்! 🌞💡
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) August 26, 2024
1 கிவா ரூ30,000/-
2 கிவா ரூ 60,000/-
3 கிவா ரூ 78,000/- வரை மானியம்.
பூமியை பசுமையாக வைத்திருக்க உதவுங்கள். இணைய தளத்தில் முதலில் பதிவு செய்யவும். அடுத்து, விண்ணப்பியுங்கள்!
LINK:… pic.twitter.com/4byZJdv0Yc
மானியம் வழங்க ஏற்பாடு: தமிழகத்தில் தற்போது 17,500 வீடுகளில் சோலார் மின் திட்டம் பயன்பாட்டில் உள்ளது. சென்னையில் மட்டும் 6,500 வீடுகள் அடங்கும். மேலும், பொதுமக்களின் ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கும் வகையில், "வீடுகளின் மேற்கூரைகளில் சோலார் பேனல்களை பொருத்துவதற்கு ரூ.78 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும்" என்று தமிழக அரசின் சார்பில் TANGEDCO மேலும் ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மானிய விவரம்: சோலார் பேனல்களை பொருத்துவதற்காக வழங்கப்படும் இந்த மானியம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், வீடுகளின் மேற்கூரைகளில் பொருத்தப்படும் சோலார் பேனல்களின் சராசரி விலை மற்றும் மானிய விவரம் பின்வருமாறு,
சோலார் பேனல்களின் திறன் | சந்தை விலை (ரூபாயில்) | அரசின் மானியம் (ரூபாயில்) | பயனாளர்களின் பங்களிப்பு (ரூபாயில்) |
1 கிலோவாட் | 75,000 to 85,000 | 30,000 | 45,000 to 55,000 |
2 கிலோவாட் | 1,50,000 to 1,70,000 | 60,000 | 90,000 to 1,10,000 |
3 கிலோவாட் | 2,25,000 to 2,55,000 | 78,000 | 1,47,000 to 1,77,000 |
அதிகாரப்பூர்வ வலைதளம்: இந்த மானியத்தைப் பெறுவதற்கு https://www.pmsuryaghar.gov.in/ என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் மற்றும் https://www.tnebltd.gov.in/usrp/applynatapp.xhtml என்ற மாநில அரசின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் பதிவு செய்துவிட்டு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவு வைக்கப்படும் மானியத் தொகை: பயனாளர்களின் வீட்டின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் பொருத்தும் பணியானது நிறைவடைந்ததும், பொருத்தப்பட்ட பேனல்களுக்கு உரிய மானியத் தொகையானது நேரடியாக பயனாளரின் வங்கிக் கணக்கில் 7 முதல் 30 நாட்களுக்குள் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பயனாளர்களுக்கு கடன் வழங்க இத்திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: விண்வெளியில் குளிக்கணுமா? 300 நாட்களை எப்படி சமாளிப்பார் சுனிதா வில்லியம்ஸ்?