உலகளவில் வீடியோ ஸ்டிரீமிங் தளத்தின் அரசனாகத் திகழ்ந்துவரும் யூடியூப், அதன் அடிப்படை பயனர்களைக் கவர புதிய சந்தா திட்டத்தை அறிமுகம் செய்கிறது. இதனை சாத்தியமாக்க தாய் நிறுவனமான கூகுள், ஜெர்மனி, தாய்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், யூடியூப் பிரீமியம் லைட் சந்தா (Youtube Premium Lite subscription) திட்டத்தை சோதனை செய்து வருகிறது.
எப்போதும் காணொளிகளின் (வீடியோக்களின்) நடுவே பெரிய விளம்பரங்கள் வருவது தான் பயனர்களுக்கு பிரச்சினையாக இருந்தது. விளம்பரங்கள் இல்லாமல் யூடியூப் வீடியோக்களை பார்க்க வேண்டும் என்றால், சந்தா செலுத்தி பிரீமியம் திட்டங்களைப் பெற வேண்டும்.
தற்போது இந்த பிரீமியம் சந்தாவை செலுத்த முடியாத மக்களுக்காக லைட் திட்டத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, பிரீமியம் திட்டத்தின் பாதி விலையை செலுத்தி, ‘யூடியூப் பிரீமியம் லைட்’ சந்தா திட்டத்தைப் பெற முடியும். லைட் சந்தாதாரர்களுக்கு குறைந்த அளவிலான விளம்பரங்கள் மட்டுமே காட்டப்படும் என இதன் பீட்டா சோதனை பயனர்கள் சமூக வலைத்தளங்களில் தகவல் தெரிவித்துள்ளனர்.
யூடியூப் பிரீமியம் லைட் சந்தா எவ்வளவு?
இன்ஸ்டாகிராம் திரெட்சில் ‘jonahmanzano’ எனும் பயனர் இது தொடர்பாக ஒரு படத்துடன் பதிவிட்டுள்ளார். அதன்படி, YouTube பிரீமியம் லைட் ஒரு மாதத்திற்கு 8.99 டாலர்கள் செலவாகும் எனக் குறிப்பிட்டிருந்தார். இது 16.99 டாலர்கள் என்ற வழக்கமான பிரீமியம் திட்டத்தை விட கிட்டத்தட்ட 50 விழுக்காடு மலிவானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், யூடியூப் பிரீமியம் லைட் வருடாந்திர சந்தா திட்டமாக கிடைக்குமா என்பது இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இதையும் படிங்க |
யூடியூப் பிரீமியம் லைட் சந்தா திட்டம் இந்தியாவில் கிடைக்குமா என்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் கூகுள் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், ஒருவேளை இங்கு அறிமுகம் செய்யப்பட்டால் பயனர்கள் ரூ.75 என்ற விலையில் யூடியூப் பிரீமியம் சேவைகளை அனுபவிக்க முடியும். தற்போது, பிரீமியம் திட்டத்திற்காக இந்தியர்கள் மாதம் ரூ.149 செலவழித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் சோதனை செய்துவரும் கூகுள் வியோ:
யூடியூபில் பெரும்பாலான மக்கள் குறைந்த நேர வீடியோக்களான ஷார்ட்ஸை (Youtube Shorts) அதிகம் பார்க்கின்றனர். அதுமட்டுமில்லாமல், ஷார்ட்ஸ் காணொளிகளைப் பதிவேற்றம் செய்ய அதிகம் முன்வருகின்றனர். இதனால், ஷார்ட்ஸ் கிரியேட்டர்களுக்கு உதவவும் கூகுள் சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அந்தவகையில், கூகுள் வியோ (Google Veo) எனும் சேவையை சோதனை செய்துவருகிறது. இது அறிமுகமானால், செயற்கை நுண்ணறிவு (AI) வாயிலாக ஷார்ட்ஸ் வீடியோக்களை உருவாக்கவும், வேகமாக எடிட் செய்யவும் முடியும்.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.