ஹைதராபாத்: பொதுவாக வருடத்திற்கு 3 முதல் 4 முறை சூப்பர் மூன்கள் (Super Moon) திகழ்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான முதல் சூப்பர் மூன் நேற்று (ஆக.19) தென்பட்டது. அதிலும் குறிப்பாக, சூப்பர் மூனும் (Super Moon) ப்ளூ மூனும் (Blue Moon) இணையும் அரிதான வானியல் நிகழ்வை காணமுடிந்தது. இந்த அபூர்வமான வானியல் நிகழ்வானது பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் என்று கூறப்படுகிறது.
சூப்பர் மூன் என்பது 90 சதவிகிதத்திற்குள்ளாக பூமிக்கு மிக அருகில் வரும் நிலவாகும் என்று நாசா விளக்குகிறது. மேலும், இந்த ப்ளூ மூன் தோற்றம் முதன்முதலில் 1528ஆம் ஆண்டுதான் பதிவு செய்யப்பட்டதாக, ஓய்வுபெற்ற நாசா திட்ட நிர்வாகி கோர்டன் ஜான்ஸ்டன் (Retired NASA Program Executive, Gordon Johnston) கூறியுள்ளார்.
இந்த அரியவகை சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வின்போது நிலவின் ஒளி வழக்கத்தை விட 30 சதவீதம் அதிக பிரகாசமாக இருக்கும் என்றும், ஆகஸ்ட் 19ஆம் தேதிக்குப் பின்னாலும் கூட சில நாட்கள் நிலவு அதிக வெளிச்சமாக இருப்பதைக் காணலாம் என்றும் கூறப்படுகிறது. உலகின் வெவ்வேறு பகுதிகளில் இந்த சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வைப் பார்க்க இயலும்.
அந்த வகையில், வட அமெரிக்காவில் நேற்று (ஆக.19) காலை முதல் புதன்கிழமை அதிகாலை வரையில் சுமார் மூன்று நாட்களுக்கு முழுமையாகத் தோன்றும். அதேபோல, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிகாலையில் சூப்பர் ப்ளூ மூன் நிலவைப் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக, இந்தியாவில் நேற்று (ஆக.19) இரவு முதல் இன்று (ஆக.20) அதிகாலை வரை பார்க்க இயன்றது என்றும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவில் நேற்றைய முன்தினம் (ஆக.18) மாலை முதல் நேற்று (ஆக.19) இரவு வரையும், பிறகு மீண்டும் இன்று (ஆக.20) அதிகாலையிலும் சூப்பர் ப்ளூ மூன் நிலவு காணப்பட்டது என்றும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக, ஆகஸ்ட் மாதம் வரும் முழு நிலவுக்கு 'ஸ்டர்ஜன் மூன்' (Sturgeon Moon) என்று பெயர். ஆனால் இந்த ஆண்டு, சூப்பர் மூனும் ப்ளூ மூனும் இணைந்து ஆகஸ்ட் மாதத்தில் தோன்றியதால் 'சூப்பர் ப்ளூ ஸ்டர்ஜன் மூன்' (Super Blue Sturgeon Moon) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கண்கவர் வான் நிகழ்வு இந்த ஆண்டு தோன்றும் நான்கு சூப்பர் மூன்களில் முதலாவது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, இந்த ஆண்டிற்கான இரண்டாவது சூப்பர் மூன் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று நிகழும் என்றும், அதன் ஒரு பகுதி பூமியின் நிழலுக்குள் செல்வதால், இரவில் பூமியால் ஓரளவு கிரகணம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த இரண்டாவது சூப்பர் மூன் அறுவடை நிலவு என்று அழைக்கப்படுகிறது.
The Moon looks amazing https://t.co/FHXsC6TOgY
— Elon Musk (@elonmusk) August 20, 2024
அதன் தொடர்ச்சியாக, ஆண்டின் மூன்றாவது முழு நிலவு அக்டோபர் 17ஆம் தேதி பிரகாசிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹண்டர்ஸ் மூன் என்று அழைக்கப்படும் இது, இந்த ஆண்டில் தோன்றும் பூமிக்கு மிக நெருக்கமான முழு நிலவாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த ஆண்டின் கடைசி சூப்பர் மூன் நவம்பர் 15ஆம் தேதி அன்று நிகழும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நாசா (NASA) தனது 'X' வளைத்தளப் பக்கத்தில் "திங்கள் முதல் புதன் வரை வானில் முழு நிலவைக் காண முடியும், அது ஒரு சூப்பர் ப்ளூ மூன்" என்று சூப்பர் ப்ளூ மூனின் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, நாசாவின் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில், எலான் மஸ்க் தனது 'X' வளைத்தளப் பக்கத்தில், நாசாவின் பதிவை டேக் (Tag) செய்து "அற்புதமாக காட்சிதரும் நிலவு" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ரெட் அலர்ட் என்றால் என்ன? வானிலை எச்சரிக்கை வண்ணங்களுக்கான அர்த்தம் என்ன?