உள்நாட்டு பைக் தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், தனது ஸ்போர்ட்டி கம்யூட்டர் பைக்கான டிவிஎஸ் ரைடர் 125 மாடலின் புதிய பதிப்பை அறிமுகம் செய்துள்ளது. டிவிஎஸ் ரைடர் ஐகோ (TVS Raider iGO) என பெயரிடப்பட்டுள்ள இந்த வேரியன்ட் இந்திய சந்தையில் ரூ.98,389 எனும் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் ஆன் ரோடு விலை சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் (ரூ.1,20,000) ஆக இருக்கலாம்.
இந்த பைக்கில் முக்கியமான சிறப்பு என்னவென்றால், இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் iGO அசிஸ்ட் தொழில்நுட்பம் தான். இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிறுவனம் சமீபத்தில் 6 வண்ண விருப்பங்களுடன் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ரெய்டர் iGO வெளியீட்டு நிகழ்வில், இதன் பிந்தைய மாடல்களின் விற்பனை 10 லட்சத்தைத் தாண்டியதாக டிவிஎஸ் குறிப்பிட்டது.
டிவிஎஸ் ரைடர் iGo சிறப்புகள் (TVS Raider iGO):
ரெய்டர் iGo ‘பூஸ்ட் மோடு’ (Boost Mode) எனும் ஆப்ஷனைக் கொண்டிருக்கிறது. இதன் வாயிலாக வாகனத்தின் எஞ்சினின் அடிப்படை டார்க்கை விட கூடுதலாக 0.55 Nm டார்க்கை உற்பத்தி செய்ய முடியும். அதுமட்டும் இல்லாமல், எரிபொருள் சேமிப்பு அம்சமும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மோடில் 10% பெட்ரோலை சேமிக்க முடியும் என்கிறது டிவிஎஸ்.
மேலும், 0 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தை அடைய வெறும் 5.8 விநாடிகள் போதும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் டிவிஎஸ் நிறுவனத்தின் பிரத்யேக SmartXonnect உடன் வரும் எல்சிடி (LCD) டிஜிட்டல் கிளஸ்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில், வாய்ஸ் அசிஸ்டன்ட், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் உள்பட 85 க்கும் மேற்பட்ட அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
Introducing the TVS Raider with iGO - The Fastest 125cc Motorcycle in the Segment, with a First-In-Class “Boost Mode” pic.twitter.com/uxHPSp09b0
— Exencial Research Partners (@exencial_RP) October 24, 2024
இதையும் படிங்க |
டிவிஎஸ் ரைடர் iGO எஞ்சின் திறன்:
இதில் 124.8cc, 5 ஸ்பீடு கியர்பாக்ஸ், 3-வால்வ் எஞ்சினானது ஒருங்கிணைந்த ஸ்டார்ட் ஜெனரேட்டருடன் (ISG) இணைக்கப்பட்டுள்ளது. இது கூடுதல் உந்து சக்தியை வழங்குகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 11.22 பிஎச்பி (bhp) பவரையும், 11.3 Nm (நியூட்டன் மீட்டர்) டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக் லிட்டருக்கு சுமார் 65 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிற அம்சங்களைப் பொருத்தவரை, முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் அமைப்பையும், பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் அமைப்பையும் கொண்டுள்ளது. முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன.
புதிய டிவிஎஸ் ரெய்டர் iGO பதிப்பானது வெளிர் சாம்பல் மற்றும் கறுப்பு நிறங்களின் கலவையான புதிய நார்டோ கிரே வண்ண விருப்பத்தில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக ஸ்போர்ட்டி லுக்கிற்காக சிவப்பு நிற அலாய் வீல் கொண்டுள்ளது. டிவிஎஸ் ரெய்டர் iGO இந்திய சந்தையில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R, ஹோண்டா SP 125, பஜாஜ் பல்சர் N125 ஆகிய இருசக்கர வாகனங்களுடன் போட்டியிட தயாராகியுள்ளது.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.