நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ராயல் என்ஃபீல்டு இறுதியாக அதன் புதிய ராயல் என்ஃபீல்டு பியர் 650 (Royal Enfield Bear 650) மாடல் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. EICMA 2024 நிகழ்வில் இந்த பைக் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்டர்செப்டார் 650, கான்டினென்டல் ஜிடி 650, சூப்பர் மீட்டியோர் 650 மற்றும் ஷாட்கன் 650 ஆகிய மாடல்களுக்குப் பிறகு பியர் 650 நிறுவனத்தின் ஐந்தாவது 650சிசி ரெட்ரோ பைக்காக களமிறங்குகிறது.
ஆங்கிலத்தில் பியர் என்பது கரடியைக் குறிப்பதாகும். இந்த பைக்கும் அதனடிப்படையில் வடிவமைப்பைப் பெறுகிறது. குறிப்பாக இதில் பயன்படுத்தப்பட்டுள்ள எம்.ஆர்.எஃப் நைலோரெஸ் (MRF Nylorex) ஆஃப்-ரோடு டயர்கள் இதற்கு சான்றாகக் கூறலாம்.
பியர் பெயர் வைப்பதற்கான காரணம் என்ன?
அமெரிக்க டர்ட் ரேசரும், ஸ்டண்ட்மேனுமான எடி முல்டர், 1960 ஆம் ஆண்டு நடந்த கடுமையான பியர் ரன் பந்தயத்தில், மாற்றியமைக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டைப் பயன்படுத்தி வெற்றி பெற்றது, ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய தருணமாகப் பார்க்கப்படுகிறது.
எனவே, அப்போது வெற்றிவாகை சூடிய பைக்கில் இடம்பெற்ற கோடுகள், பியர் 650 பைக்கிலும் காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவை கூடுதல் சக்திகளைக் கையாளும் திறன் மற்றும் கடினமான சாலை நடவடிக்கைகளை வலுவாக எதிர்கொள்ளும் திறனை சுட்டிக்காட்டுகிறது.
ராயல் என்ஃபீல்டு பியர் 650 அம்சங்கள்:
ராயல் என்ஃபீல்டு பியர் 650 பைக்கில் இருக்கும் 650cc (சிசி) பேரலல் ட்வின் எஞ்சின் அதிகபட்சமாக 47bhp (குதிரைத் திறன்) பவரையும், 57Nm (நியூட்டன் மீட்டர்) டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் புதிய டூ இன் டூ எக்ஸாஸ்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், பைக்கின் எடை சற்று குறைந்துள்ளது. இந்த எஞ்சின் முன்பு போலவே 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க |
ஆனால், இந்த பைக்கில் டியூப்லெஸ் ஸ்போக் வீல்கள் இல்லை. பியர் 650 ஆனது, ஷாட்கன் பைக்கில் உள்ள ஷோவா யுஎஸ்டி ஃபோர்க்குகளைக் கொண்டுள்ளது. இன்டர்செப்டாரை விட இதன் சஸ்பென்ஷன் சற்று பெரிதாக இருப்பதால், இருக்கையின் உயரமும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முன்பக்கத்தில் இருக்கும் டிஸ்க் பிரேக்குகள் பெரியதாக உள்ளன. கூடவே நிலையான இரட்டை சேனல் ஏபிஎஸ் பிரேக்குகள், பியர் 650 பைக்குக்கு கூடுதல் பாதுகாப்பை சேர்க்கிறது.
மேலும், இதில் அருமையான டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் கொண்டுள்ள TFT கலர் திரை இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டராக இணைக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு பியர் 650 பைக் மொத்தம் ஐந்து வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. ராயல் என்ஃபீல்டு நவம்பர் 5 ஆம் தேதி இந்த (பியர் 650) Bear 650 பைக்கை பயனர் பயன்பாட்டுக்காக அறிமுகம் செய்யும் எனவும் இதன் விலை சுமார் 3 லட்சமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.