திருப்பத்தூர்: திருப்பத்தூர் ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமாரின் மகள் இந்துமதி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன், ஆட்டோ ஓட்டுநரான அஜித்குமார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் இந்துமதி வீட்டிற்குத் தெரிந்த நிலையில், கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், கார்த்திக் - இந்துமதி தம்பதியினருக்கு ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியில் வசித்து வந்த இந்துமதி, திருப்பத்தூர் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில், மீண்டும் இந்துமதி மற்றும் அஜித் குமார் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர், இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில், திடீரென இந்துமதி அஜித் குமாரிடம் பேச மறுத்து, விலகியதாக கூறப்படுகிறது. இதனால், அஜித்குமார் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, இன்று திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகே அஜித்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றபோது, இந்துமதி அந்த வழியாகச் சென்றுள்ளார். அப்போது, அஜித்குமார் இந்துமதியைப் பார்த்து பேசிய நிலையில், இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, இந்துமதியின் முகம் மற்றும் உடம்பு பகுதியில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியுள்ளார்.
பின்னர், அங்கிருந்த பொதுமக்கள் இந்துமதியை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். தற்போது, இந்துமதிக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், அஜித்குமார் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் தானாக முன்வந்து சரணடைந்துள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.