திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதி தமிழ்நாட்டின் பிரதான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. கோடைக்காலம், தொடர் விடுமுறையை முன்னிட்டு இப்பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகைத் தருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் உள்ள பகுதிகள் மட்டுமின்றி பில்லர் ராக்ஸ் சாலையில் உள்ள குணா குகைக்கு வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.
இந்த நிலையில், சமீபத்தில் வெளியாகி வசூலைக் குவித்த மலையாளத் திரைப்படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்', கடந்த 2006ஆம் ஆண்டு கேரள மாநிலம் மஞ்சும்மல் என்ற பகுதியிலிருந்து கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்ற இளைஞர்கள் தடையை மீறிச் செல்வதும், அவர்களுள் ஒரு இளைஞர் குணா குகைக்குள் விழுந்து மாட்டிக் கொள்வதும், அவரை மீட்பதும் தொடர்பான கதையை மையமாக வைத்து அமைந்திருந்தது.
இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், மக்கள் மத்தியில் அதன் தாக்கமும் அதிகரித்தது. அதனால் வழக்கத்தை விட நாளுக்கு நாள் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, 3 இளைஞர்கள் அத்துமீறி குணா குகைக்குச் சென்று வீடியோ பதிவிட்டனர். அந்த இளைஞர்கள் வீடியோ வைரலான நிலையில், அந்த இளைஞர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, குணா குகைக்கு மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் படம் பார்த்த சூட்டோடும், தொடர் விடுமுறை என்பதாலும் தூத்துக்குடியைச் சேர்ந்த சில இளைஞர்கள் கொடைக்கானல் பகுதிக்குச் சுற்றுலா வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குணா குகைக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்ற காரணத்தால், அவர்கள் வட்டகானல் பகுதியில் உள்ள டால்பின் நோஸ் (dolphin nose) என்ற சுற்றுலாத் தலத்திற்குச் சென்றுள்ளனர்.
டால்பின் நோஸ் மலைப்பகுதியில் ஆபத்தான வழுக்கும் பாறைகள் பல நூறு அடி கொண்ட மரணப்பள்ளங்களும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அங்குள்ள ஆபத்தான பாறையின் அருகே நின்று செல்ஃபி எடுக்க முயன்ற போது, சுற்றுலா வந்த தன்ராஜ்(22) என்ற இளைஞர் கால் தவறி டால்பின் நோஸ் பகுதியில் உள்ள ஆபத்தான 100 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார்.
அதனைக் கண்டு பதறிப்போன அவரது நண்பர்கள் அருகில் இருந்தோரின் உதவியை நாடியுள்ளனர். அதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தன்ராஜின் நண்பர்கள் உதவியுடன் சில மணி நேர தேடலுக்குப் பின்னர் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டார்.
சுமார் 100 அடி பள்ளத்திலிருந்து காலில் காயங்களுடன் மீட்கப்பட்ட தன்ராஜ் வட்டக்கானலுக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து அவரது நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
கடந்த சில வருடங்களாகவே, சுற்றுலா வரும் இளைஞர்கள் ஆபத்தான பகுதியில் தடையை மீறிச் செல்வது சாகசம் என நினைத்து, இதுபோல தவறி விழுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால், ஆபத்தான மற்றும் தடை செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு அத்துமீறிச் செல்லும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த சுற்றுலாத் தலத்தில் போதிய பாதுகாப்பு வசதிகளைச் செய்து சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.