திருவாரூர்: பேரளம் பகுதியைச் சார்ந்த வடிவேல் என்பவரது மகன் மாதவன் (19) என்பவர், அவரது நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் திருவாரூர் நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது ஆண்டிப்பந்தல் என்ற இடத்தில் திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, மாதவனின் இருசக்கர வாகனத்தில் மோதுவது போல் சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாதவன், தனது இருசக்கர வாகனத்தில் தனியார் பேருந்தை விரட்டிச் சென்றுள்ளார்.
தொடர்ந்து தனியார் பேருந்தை விரட்டிச் சென்ற மாதவன், சண்ணாநல்லூர் என்ற இடத்தில் தனியார் பேருந்தை வழிமறித்து, அப்பேருந்தின் வலதுபுற கண்ணாடியில் கல்லால் தாக்கியுள்ளார். இதில் பேருந்தில் பயணித்த திருவாரூர் மாவட்டம் கச்சனம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரது மனைவி இந்திராவின் (36) கழுத்தில் அடிபட்டு மயக்கம் அடைந்துள்ளார்.
இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும், இந்திரா தனது கைப்பையில் வைத்திருந்த 23 ஆயிரம் ரூபாய் பணத்தையும், ஆதார் கார்டையும் ஆட்டோ ஓட்டுநர்கள் அவரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து தனியார் பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில், நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவனை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: எல்லை தாண்டிய இன்ஸ்டாகிராம் மோகம்.. மனைவியைக் கொலை செய்த கணவர் - தாய்மாமன்.. தூத்துக்குடியில் நடந்தது என்ன? - Husband Killed Wife In Thoothukudi