சென்னை: தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடையும் நபர்களிடம் இருந்து உடல் உறுப்பு தானம் பெறும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, இருதயம்,நுரையீரல் ஆகிய உடல் உறுப்புகள் மூளைச் சாவு அடைந்தவர்களிடம் இருந்து தான் பெரும்பான்மையாக பெறப்படுகிறது.
இந்நிலையில், பல இருதய மற்றும் நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உறுப்புக்காக தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து பெறப்படும் நுரையீரல் மற்றும் இருதய நோயாளிகளுக்கு பதிவின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த நிலையில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச் சாவடைந்த ஒரு இளைஞரிடம் இருந்து உறுப்புமாற்று சிகிச்சைக்காக நுரையீரல் தானமாக பெறப்பட்டு சென்னையில் உள்ள இரு இளம் பெண்ணுக்கு பொருத்தி உடல் உறுப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த இந்த இளம் பெண் இறுதிநிலை நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக ஆக்சிஜன் சுவாச சிகிச்சையின் கீழ் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். ஒரு நாளுக்கு ஏறக்குறைய 10 லிட்டர் ஆக்சிஜன் இவருக்கு தேவைபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகாக காத்திருந்துள்ளார்.
இந்நிலையில், தஞ்சாவூரில் மூளைச்சாவால் இறந்த இளைஞரின் நுரையீரல் சென்னையில் உள்ள பெண்ணுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், இளைஞரின் நுரையீரல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.
பின்னர், மருத்துவமனையில் தாயர் நிலையில் இருந்த பெண்ணிற்கு தானமாக பெறப்பட்ட நுரையீரலைப் பொருத்தும் சிகிச்சையை ரேலா மருத்துவமனையின் உறுப்புமாற்று சிகிச்சை மருத்துவர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்டது. 5 மணி நேரம் நீடித்த இந்த உறுப்புமாற்று சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: "உடலுறுப்பு தான திட்டம் மிகவும் சவாலானது" - மருத்துவர் கோபாலகிருஷ்ணன் கூறுவது என்ன?
கண் தானம் இவர்கள் எல்லாம் செய்யக்கூடாதா?...பரவும் கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி!