விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், டி.கொசப்பாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்த காத்திருந்த கனிமொழி(49) என்ற பெண்ணை அவரது முன்னாள் கணவர் ஏழுமலை கத்தியால் குத்திவிட்டு தப்பமுயன்றார்.
பின்னர், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஏழுமலையை மடக்கி பிடித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கழுத்துப் பகுதியில் காயமடைந்த கனிமொழியை மீட்ட போலீசார் அன்னியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சையாக அழைத்துச் சென்றனர்.
வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து#VikravandiByElection #ByElection #Vikravandi #Stab #Women #ETVBharatTamil pic.twitter.com/CNxZiNWC5N
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) July 10, 2024
மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள கனிமொழி கூறுகையில், "தனது முன்னாள் கணவனான ஏழுமலையின் நடவடிக்கை பிடிக்காமல் தான் தனியாக வசித்து வருகிறேன். தன்னை கழுத்தில் குத்தி விட்டு கொலை செய்யும் நோக்கில் தன்னை நோக்கி வந்தார். பின்னர் அவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்" என்றார்.
இதற்கிடையில் கைது செய்யப்பட்டு போலீசார் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட ஏழுமலையை தாக்குவதற்கு பெண்ணின் தந்தை முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பெண்ணின் உறவினர்கள் வாக்குச்சாவடியில் பாதுகாப்பில் இருந்த போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். "இத்தனை போலீசார் இருந்தும் ஓட்டு போட வந்த பெண்ணிற்கு பாதுகாப்பு அளிக்க முடியவில்லையா?" என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
வாக்குப்பதிவு நிறுத்தம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 4 வாக்குச்சாவடி மையங்களில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒரு மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
காணையில் உள்ள 126 ஆவது வாக்குச்சாவடி மையம், மாம்பழப்பட்டு பகுதியில் உள்ள 66ஆவது வாக்குச்சாவடி மையம்,
ஒட்டன் காடுவெட்டியில் உள்ள 68 வது வாக்குச்சாவடி மையம், பொன்னங்குப்பத்தில் உள்ள 203வது வாக்குச்சாவடி மையம்
ஆகிய 4 வாக்குச்சாவடி மையங்களுக்கு புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வரப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
11 மணி நிலவரம்: காலை 11 மணி நிலவரப்படி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29.97 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.