கோயம்புத்தூர்: கோவை ஆர்எஸ் புரம் பகுதியைச் சேர்ந்த விஷ்வதர்சினி என்பவர் பேஸ்புக் மூலம் கோவை சேரன் பகுதியைச் சேர்ந்த செலினா என்பவருடன் பழகி, தான் டைகர்வே என்ற டிரஸ்ட் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில், கடந்த மே 8ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட விஷ்வதர்சினி கோவை காவல்துறைக்கு எதிராக பொதுமக்களை தூண்டும் விதமாகவும், மிரட்டும் விதமாகவும் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக அளவில் பரவியது. இது குறித்து செல்வபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா அளித்த புகாரின் அடிப்படையில் அப்பெண் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே விஷ்வதர்சினி மீது காவல் துறையினருடன் ஆபாசமாகப் பேசி, பணி செய்ய விடமால் தடுத்தது மற்றும் பிரகாஷ் ஸ்வாமி என்பவரை மிரட்டியது என துடியலூர் காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. மேலும், கடந்த 2018ஆம் ஆண்டு சிறுமி குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
அந்த வழக்கில், போக்சோ சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்ததும் குறிப்பிடத்தக்கது. பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்ட விஷ்வதர்சினி, காவல் துறையினரை மிரட்டுவதையும், அவதூறு பரப்புவதையும் கட்டுப்படுத்தும் வகையில், அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கோவை மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு.. சேலத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?