மதுரை: கோயில் மாநகர் என்ற சிறப்பை உலகளாவிய வகையில் பெற்றுத் திகழும் மதுரையில், கடந்த ஜூலை 3ஆம் தேதி செக்காணூரணி சொக்கநாதபுரத்தில் பவுன்ராஜ் (54) என்ற பூசாரி, ஜூலை 4ஆம் தேதி அப்பன் திருப்பதியில் ரவுடி முருகானந்தம் (24), ஜூலை 9ஆம் தேதி சிலைமான் அருகே தனியார் தோட்டத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த பெண்.
அதே தேதியில் திருமங்கலம் வாகைக்குளத்தில் நகைக்காக காசம்மாள் (70) என்ற மூதாட்டி, ஜூலை 10-ஆம் தேதி கொட்டாம்பட்டி கச்சிராயன்பட்டியில் நகைக்காக பாப்பாம்மாளும் (50), அவரது கணவர் அழகு (60), ஜூலை 11ம் தேதி தனியார் மருத்துமனை 6வது மாடியில் நகைக்காக முத்துலட்சமி (75).
ஜூலை 13, கீழையூர் மீனாட்சிபுரத்தில் கல் உடைக்கும் தொழிலாளி லட்சுமணன் (45), ஜூலை 14 மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டில் வசிக்கும் கார்த்திக் (36), ஜூலை 16 தல்லாகுளம் பகுதியில் பாலமுருகன் என்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி என மேற்கண்ட கொலைகள் நிகழ்ந்துள்ளன.
குற்றச்சம்பவங்களில் இளஞ்சிறார்கள்: இதில் குறிப்பிட்ட சில சம்பவங்களில் 18 வயதுக்கும் குறைவான இளஞ்சிறார் குற்றாவளிகள் ஈடுபட்டுள்ளதும், இக்கொலைச் சம்பவங்களை நிகழ்த்திய நபர்கள் பெரும்பாலும் 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலைச் சம்பவங்கள் ஒருபுறமிருக்க, இவற்றில் ஈடுபட்ட இளைஞர்களின் உளவியல் போக்கு பெரும் சமூகச் சிக்கலை உருவாக்க வாய்ப்புண்டு என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள். இதுகுறித்து குழந்தைகள் உளவியல் வல்லுநர் டாக்டர் ராணி சக்ரவர்த்தி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்காக வழங்கிய சிறப்பு நேர்காணலில் தனது வேதனையையும், சமூகத்தின் கடமை குறித்தும் பகிர்ந்துள்ளார்.
குறைந்த கூலி: அதில், “தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக 18 வயதுக்கு கீழுள்ள இளம் சிறுவர்கள் குற்றச் செயலில் ஈடுபடுத்தும் போக்கு அதிகமாகக் காணப்படுகிறது. அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்று சொல்வதைவிட, ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பதே உண்மை. இதற்கான காரணிகளை அலசி ஆராயும்போது, மிகக் குறைந்த கூலி என்பது முதன்மையாக உள்ளது.
இரண்டாவது, இதுபோன்ற செயல்களைச் செய்வதற்கு எளிதாக இந்த சிறுவர்களை மனமாற்றம் செய்துவிட முடியும். அதுமட்டுமன்றி, இதுபோன்ற சிறார்களை கையாளுவதும் மிக எளிது. பெரிதாக எதையும் யோசிக்கமாட்டார்கள். ஏவுகின்ற நபர்களைத் தாண்டி வேறு எதுவும் செய்ய மாட்டார்கள் என்பதும் கூடுதல் சிறப்பு.
இயல்பாக ஊடகங்கள் ஒரு சில ரவுடிகள் குறித்து குறிப்பிடும்போது 'பிரபல' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு ரவுடிக்கு 'பிரபல' என்ற அங்கீகாரத்தை தருவதன் வாயிலாக இளம் சிறார்களுக்கு வேறு விதமான பிம்பத்தை ஏற்படுத்தி விடுகிறோம். இதன் வாயிலாக அவர்கள் பிரபலமானவர்கள், வலுவானவர்கள், பெரிய ஆட்கள் என அடையாளப்படுத்துவதும், திரைப்படங்களில் கொடுக்கப்படும் முக்கியத்துவமும் இதுபோன்ற சிறுவர்களை குற்றச் செயல்களுக்கு எளிதாக வசப்படுத்திவிட முடிகிறது.
திரைப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான முக்கியத்துவம் வில்லன் கதாபாத்திரத்துக்கும் அளிப்பதும் இவர்களின் மனநிலையைத் தீர்மானிக்கிறது. பணம், பெயர், புகழ், அதிகாரம் ஆகியவை ரவுடிசத்தால் சாத்தியம் என்ற எண்ணமே இதுபோன்ற இளஞ்சிறார் குற்றச் செயல்களுக்கு காரணமாக அமைகிறது. தான் விரும்பிய ஒன்றை அடைவதற்கு எளிதான வழி இதுபோன்ற ரவுடிசம்தான் என்பதை ஆழமாக பதிந்து கொண்டு விடுகிறார்கள்.
மதுபோதை: மற்றொரு முக்கிய காரணியாக அமைவது போதைப் பழக்கம். தனக்கு கிடைக்க வேண்டிய போதைக்காக எதையும் செய்வதற்கு இன்றைய இளைஞர்கள் தயாராக உள்ளனர். இதற்கான தேவையின் பொருட்டும் பணத்திற்காக குற்றச் செயல்களுக்கு தயாராகிவிடுகின்றனர். கள்ளச்சாராயமோ அரசே விற்கும் நல்ல சாராயமோ, போதைப்பொருள் என எதுவாக இருந்தாலும் போதை என்பது அவர்களது வாழ்வில் முக்கிய அங்கமாகிவிட்டது.
இதுபோன்ற போதைப் பழக்கத்திற்கு சிறுவர்களை அடிமையாக்குவதற்காகவே பள்ளி வளாகங்களுக்குள் மெல்ல மெல்ல கொண்டு செல்கிறார்கள். இதற்கு அடிமையானவுடன், அதனைப் பயன்படுத்தி தங்களது தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் தனக்கான போதைக்காக எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடத் தொடங்கிவிடுகிறார்கள். போதைப்பழக்கம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். இதனை திட்டமிட்டு அரசாங்கம் செய்தால் 75 விழுக்காடு மாணவர்கள் நிச்சயம் விடுபடுவார்கள்.
கற்றல் குறைபாடு: இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற இளஞ்சிறார்கள், பெரும்பாலும் கற்றல் குறைபாடு உடையவர்களாக இருக்கிறார்கள் என்பது மற்றொரு முக்கியமான விஷயம். பள்ளியிலிருந்து இடை நிற்றல் அல்லது வீட்டைவிட்டு வெளியேறியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் படிப்பில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.
குழந்தைகள் குறித்த அனைத்து ஆய்வுகளும் சொல்லும் உண்மை இது. பத்து பேருக்கு 7 பேர் இதுபோன்ற கற்றல் குறைபாடு உடைய மாணவர்கள்தான். பள்ளி பயிலும்போது அவர்கள் படுகின்ற அவமானமும், சமூகத்தின் புற அழுத்தம் காரணமாகவும், இதனை தாங்க முடியாமல் இதுபோன்ற அவலங்களுக்குள் சிக்கிக் கொள்ள நேர்கிறது. தங்களை குற்றச் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்கின்ற நபர்களை வடிகாலாக அவர்கள் பார்க்கிறார்கள்.
கரிசனம் வேண்டும்: நமது கல்விக்கூடங்கள் மருத்துவர், பொறியாளர் என பதவிகளுக்காக மாணவர்களை தயார்ப்படுத்தும் முயற்சியில் எத்தனை சதவிகிதம் கற்றல் குறைபாடு உடைய குழந்தைகளை தயார்படுத்த முனைகிறோம் என்பது கேள்விக்குறி. இதுபோன்ற குழந்தைகளின் விளையாட்டு உள்ளிட்ட மாற்றுத் திறன்களைக் கண்டறிந்து வழிகாட்ட வேண்டும். மாணவர் தலைவர்களாக அவர்களைக் கொண்டுவர பல இடங்களில் நான் வலியுறுத்தி வருகிறேன்.
ஆசிரியர்கள் கவனத்திற்கு: நாட்டைக் காப்பாற்ற ராணுவம் எவ்வளவு முக்கியமோ, அது போலவே இது போன்ற குழந்தைகளை நல்வழிப்படுத்துவம் முக்கியம். அவர்களை உணர்வுப்பூர்வமாக அணுகி வழிநடத்துவதில் கவனம் கொடுக்க வேண்டும். ஒரு மாணவர் படிக்கவில்லையென்றால் ,ஆசிரியர்களுக்கோ மற்றவர்களுக்கோ வேண்டாதவன் ஆகிவிடுகிறான். ஆசிரியர்களையோ, நமது கல்வித்துறையையோ நான் குறை சொல்லவில்லை. ஆனால், இந்தக் குழந்தையின் எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது என்பதை அறிவுறுத்த விரும்புகிறேன்.
அரசியலில் ரவுடிகள்: ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட நம் சமூகம் கரிசனையோடு இதுபோன்ற மாணவர்கள் விசயத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்றால், அவர்கள் கூலிப்படையாக மாறுவதை நிறுத்தவே முடியாது. இதுபோன்ற நிலை தவறான முன்னுதாரணங்களை உருவாக்கிவிடும். அரசியல் கட்சிகளில் சேர்ந்து பதவி பெற்று சமூக மரியாதை பெறுகின்ற ரவுடிகளும் வளரும் தலைமுறைக்கு ரோல் மாடலாக மாறும் போக்கினையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
இதனை நமது அரசியல் கட்சிகளும் தவிர்க்க வேண்டும். குற்றச்செயல்கள் உள்ள நபர்களை புறக்கணிக்க வேண்டும். எதிர்காலத்தில் இளம் சிறார் குற்றவாளிகள் உருவாவதற்கான காரணிகள் அனைத்தையும் கண்டறிந்து, அவற்றையெல்லாம் தவிர்ப்பதுதான் நல்ல சமூகம் மலர்வதற்கான சூழலாக அமையும்' என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்