விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் இன்று நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்த மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய், கட்சியின் கொள்கைகள், தவெகவின் அரசியல் நிலைப்பாடு ஆகியவற்றை விளக்கி பேசினார். குறிப்பாக, தங்களின் அரசியல் எதிரி யார் என்பதை தொண்டர்கள் மத்தியில் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.
மாநாட்டில் தமக்கே இயல்பான தொணியில் விஜய் பேசும்போது, "பிறப்பால் அனைவரும் சமம் எனக்கூறும் 'பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்' என்ற குறள் நெறிக்கு மாறாக, சாதி, மதத்தால் மக்களை பிளவுப்படுத்தி அரசியல் செய்பவர்கள்தான் தவெகவின் கொள்கை எதிரிகள். அடுத்து, அவர்களை பாசிசம்... பாசிசம்.. எனக் கூறிக்கொண்டு, திராவிட மாடல் என மக்களை ஏமாற்றிக் கொண்டு ஊழல் மலித்த ஆட்சியை செய்துக் கொண்டிருக்கும் சுயநலக் கூட்டம் தான், கபடதாரிகள் தான் எங்களின் அரசியல் எதிரிகள்" என்று விஜய் அழுத்தம் திருத்தமாக பேசினார்.
பாசிசம்.. பாயாசம்: அவர்களை பாசிசம்... பாசிசம் என்றால் நீங்கள் மட்டும் என்ன பாயாசமா? என்றும் அவர் கிண்டலாக கேள்வியும் எழுப்பினார். அவரது இக்கேள்வியால் தொண்டர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
மேலும் அவர், "மக்களோடு மக்களாக நின்று, அனைவருக்கும் எல்லாம் சமமாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு களமிறங்கியுள்ள எங்களுக்கு, எங்களது கட்சியின் நிறத்தைத் தவிர வேறெந்த நிறத்தையும் யாரும் பூச முடியாது. ஏனென்றால் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது ஒரு குறிப்பிட்ட நிறத்தைப் பூசும் ஒரு கும்பல் இங்கு உள்ளது.
ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, வீடு, வேலை ஆகியவற்றை தர முடியாத அரசு இருந்தால் என்ன, இல்லாவிட்டால் தான் என்ன?" என்று ஆவேசமாக கேள்வியெழுப்பினார் விஜய்.