தஞ்சாவூர்: ஐடி நிறுவனங்கள் என்றாலே நாம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்கள்தான். இது போன்ற நகரங்களில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்த வேண்டும் என்றால் அதிக பொருட்செலவு ஆகிறது.
இது போன்ற சூழ்நிலையில்தான் சென்னைக்கு அடுத்தபடியாக, ஐடி நிறுவனங்களின் டார்கெட்டாக இருப்பது கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள்தான். இங்கு பெருநிறுவனங்கள் முதல் 'ஸ்டார்ட் அப்' எனப்படும் சிறிய நிறுவனங்கள் வரை பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. இருப்பினும், கிராமங்களைப் பெரும் பகுதியாகக் கொண்ட நகரங்களில் ஐடி நிறுவனங்கள் தொடங்கப்படுவது வெறும் கனவாகவே இருந்து வந்தது.
இதனை நிவர்த்தி செய்யும் விதாமாக, தஞ்சாவூர் மாநகரத்தில் ஐடி நிறுவனம் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார், நாகை மாவட்டம் தலைஞாயிறு கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் கந்தா பக்கிரிசாமி(44). தற்போது இவர் தஞ்சையில் வசித்து வருகிறார்.
நாகை பொறியாளர்: இது குறித்து பொறியாளர் கந்தா பக்கிரிசாமி ஈடிவி பாரத்திடம் அளித்த பேட்டியில், '1999 ஆம் ஆண்டுகளில் பி.இ.மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தேன். 2000ஆம் ஆண்டில் சென்னையில் தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக பணியாற்றினேன். அப்போது, எனக்கு ஊதியம் ரூ.1,250 மட்டுமே. ஆனால் என்னுடைய கனவு, ஆசை எல்லாம் ஒரு சாப்ட்வேர் என்ஜினியராக மாற வேண்டும் என்பதுதான்.
இந்த நிலையில்தான், 2004 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்குச் சென்று முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் டேட்டா அன்ட் அனாலிட்டிக்ஸ் துறை (Department of Data and Analytics) வளர்ச்சி பெறத் தொடங்கிய காலம். இதை சவாலாக எடுத்து முழுவீச்சில் பணியாற்றினேன். இதன் மூலம் படிப்படியாக உயர்ந்து, 2015 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்செல்ஸில் டேட்டா அனாலிட்டிக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினேன். ஆனால், நிறைய சவால்களை சந்தித்தேன்.
தனியார் நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றியபோது கிடைத்த ஊதியத்தில் பத்தில் ஒரு பங்குதான் வருமானம் கிடைத்தது. புராஜெக்ட்ஸ்களும் எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை. எனவே, கனடாவுக்குச் சென்று வாடிக்கையாளர்களைச் சந்தித்த பிறகு புராஜெக்ட்ஸ்கள் கிடைக்கத் தொடங்கின. அப்போது, சொந்த ஊரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற தாக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, தஞ்சாவூரில் 'ப்ளூம் ஃபீல்ட்எக்ஸ்' (Bloomfieldx) என்கிற பெயரில் நிறுவனத்தைத் தொடங்கினேன். ஆரம்பத்தில் நிறைய சவால்களும் ஏற்பட்டன. இணையதள வசதி, மின் வசதி, திறன்மிக்க மனிதவளம் போன்றவை பிரச்சனையாக இருந்தன.
காலப்போக்கில் தடையற்ற இணையதளம், மின்சார வசதி கிடைத்தது. திறன்மிக்க மாணவர்களைத் தேர்வு செய்து பணியில் நியமித்தேன். முதலில் சில பணியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் தற்போது பெண்கள் உள்பட சுமார் 100 பேர் பணியாற்றி வருகின்றனர்.
திருமணம், மகப்பேறு போன்ற காரணங்களால் இடையில் நின்ற பெண்களை ஊக்கப்படுத்தி மீண்டும் வேலைவாய்ப்பு கொடுத்து வருகிறோம். அலுவலகத்திலும், அவரவர் வீட்டிலிருந்தும் டேட்டா அனாலிட்டிக்ஸ் தொடர்பான பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆண்டுக்கு ரூ.2.40 லட்சம் முதல் அவரவர் திறனுக்கேற்ப ரூ.15 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இவர்களில் ஐ.டி. படித்தவர்கள் மட்டுமல்லாமல், மற்ற துறைகளில் படித்தவர்களும் பணியாற்றுகின்றனர். இவர்களில் 90 சதவீதம் பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்நிறுவனத்துக்கு அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதன் மூலம், இந்நிறுவனத்தை வெற்றிகரமாகக் கொண்டு செல்கிறோம். தமிழக அரசு சார்பில் தஞ்சாவூர் மேலவஸ்தாச்சாவடி பகுதியில் ரூ 27.13 கோடி மதிப்பீட்டில் 4 அடுக்குமாடி டைடல் பார்க் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பல இளைஞர்களுக்கு ஐடி துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
பெரு நகரங்களில் செலவுகள் அதிகமாக உள்ளது. அதை ஒப்பிடும்போது இங்கு குறைவாக இருப்பது, போக்குவரத்து நெரிசல் இல்லாதது போன்ற காரணங்களால் பணியாளர்கள் திருப்தி அடைகின்றனர். பெரு நகரங்களில் பணியாற்றும் சாப்ட்வேர் நிறுவன ஊழியர்கள் எல்லாம் சொந்த ஊருக்குத் திரும்பி, அதே வேலையைத் தொடர வேண்டும் என்பதே எனது இலக்கு' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் சுற்றுலாத்துறை கண்காட்சி; பொதுமக்களைக் கவரும் ராமோஜி ஃப்லிம் சிட்டி அரங்கம்!