சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 10ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிய பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதன்படி, 4 லட்சத்து 47 ஆயிரத்து 61 மாணவிகள், 4 லட்சத்து 47 ஆயிரத்து 203 மாணவர்கள் என மொத்தம் 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இவர்களில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 மாணவிகள், 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 மாணவர்கள் என மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில், 94.53 சதவீத மாணவிகள், 88.58 சதவீத மாணவர்கள் என மொத்தம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.55 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும், வழக்கம்போல் மாணவர்களை விட 5.95 சதவீதம் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேநேரம், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் துணைத் தேர்வு ஜூலை 2 முதல் நடைபெறும் எனவும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் வருகிற மே 15ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று காலை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேது ராம வர்மா வெளியிட்டுள்ளார். இதன் அடிப்படையில், தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும், மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in அல்லது www.dge.tn.gov.in அல்லது https://results.digilocker.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் எனவும், மேலும் பள்ளிகளில் மாணவர்கள் மதிப்பெண்களை பார்த்து தெரிந்து கொள்வதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் மதிப்பெண்களுடன் கூடிய பட்டியல்களும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி! - 10th Exam Results