மதுரை: தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள், ஸ்ட்ராங் ரூம் என்று அழைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அந்த வகையில், மதுரையில் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டிகள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டு, அங்கு 3 அடுக்கு பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என புகார் எழுந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும், சிறிது நிமிடங்களில் அது சரிசெய்யப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (புதன்கிழமை) மதுரை மருத்துவக் கல்லூரியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவின் பேரில், தற்போது அவற்றை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
ஒரு மாத காலமாக கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று மாலை மதுரையின் பல்வேறு பகுதிகளில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்த நிலையில், சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், தற்போது அதிகாரிகள் முன்னிலையில், சிசிடிவி கேமராக்கள் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.