சென்னை: 1903 ஆண்டு முதல் அமெரிக்காவின் மிச்சிகனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃபோர்டு நிறுவனம்(FORD CAR COMPANY) உலகின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் நிறுவனமாக உள்ளது. ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களில் தங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளை தொடங்கியது.
இதில் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே ரூ.1,700 முதலீட்டில் 1999 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்படது. மீண்டும் 2009 ஆம் ஆண்டு ரூ.1,500 கோடி கூடுதல் முதலீட்டில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்திட அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் ஒப்பந்தம் போடப்பட்டு, தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு உற்பத்தியை பெருகியது. இதன் மூலம் ஆண்டிற்கு 2.5 லட்சம் கார் எஞ்ஜின்களை தயாரித்து உலகின் 30 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டது.
நாளாடைவில் உற்பத்தி குறைந்து ஏற்றுமதி சரிந்ததால் நிறுவனத்தின் லாபம் குறையத் தொடங்கியது. இதனால், கடந்த 2021ஆம் ஆண்டு அறிவித்து, 2022-ஆம் ஆண்டு ஃபோர்டு நிறுவனம் மறைமலை நகரில் செயல்பட்டு வந்த தனது ஆலையை மூடியது. அங்கு பணிபுரிந்த 2,500 ஊழியர்கள் வேலை இழந்தனர்.
இதையும் படிங்க: 17 நாட்கள் அமெரிக்க பயணத்தில் ரூ.7,616 கோடி முதலீடு.. முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் முழு விபரம்!
சென்னை மற்றும் குஜராத்தில் செயல்பட்டு வந்த இரண்டு ஃபோர்டு தொழிற்சாலைகளும் மூடப்பட்டது. குஜராத்தில் இருந்த தொழிற்சாலையை டாடா குழுமத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் மறைமலை நகரில் இருந்த 360 ஏக்கர் பரப்பளவு கொண்ட தொழிற்சாலையை யாருக்கும் விற்க முன்வரவில்லை. அந்த தொழிற்சாலையை வாங்க பிரபல கார் மற்றும் மோட்டார் பைக் தொழிற்சாலை நிறுவனங்கள் போட்டி போட்டது. ஆனாலும் தற்போது வரை விற்பனை செய்யப்படாமல் மூடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனம் தனது தொழிற்சாலையை மூடினாலும் ஃபோர்டு பிசினஸ் குழுவில் 12,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாடு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை நிர்ணத்துள்ளதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் 27 ஆம் தேதி (ஆக.27) அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார்.
அந்த வகையில், செப்டம்பர் 10 தேதி அமெரிக்கவின் சிகாகோவில், ஃபோர்டு நிறுவனத்தின் அதிகாரிகளை சந்தித்து, தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். முதலமைச்சர் கேட்டுக்கொண்டதால் ஃபோர்டு நிறுவனம் தனது கார் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி பணிகளை மீண்டும் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அது தொடர்பாக ஃபோர்டு நிறுவனம் கடிதம் ஒன்றையும் தமிழக அரசிடம் வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் ஃபோர்டு நிறுவனம் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் மீண்டும் தனது தொழிற்சாலையை தொடங்குவது உறுதியாகியுள்ளது.
இதனால் தொழிற்சாலையில் மீண்டும் 3,000 பணியாளர்களுக்கு வேலை கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் மூலமாக 18 நிறுவனங்களுடன் ரூ.7616 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.