சென்னை: 1947, ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடிகளில் ஒன்று சென்னை புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் உள்ள கொடியாகும். இக்கொடியானது பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது. இது 12 அடி நீளம், 8 அடி அகலம் கொண்டதாகும். இந்த தேசியக் கொடி 1947, ஆகஸ்ட் 15 அன்று ஏற்றப்பட்ட முதல் கொடிகளில் ஒன்றாகும்.
1947-ம் ஆண்டில் ஏற்றப்பட்ட கொடிகளில் எஞ்சியிருக்கும் ஒரே கொடியும் இதுவாகும். சுதந்திரத்தை அடைய இந்தியர்கள் மேற்கொண்ட ஒட்டுமொத்த போராட்டத்தின் சாட்சியமாக தேசியக் கொடி உள்ளது. இது தூய பட்டினால் ஆனது. சுமார் 3.50 மீட்டர் நீளமும், 2.40 மீட்டர் அகலமும் கொண்டது.
1947 ஆகஸ்ட் 15 அன்று அதிகாலை 5.30 மணிக்கு புனித ஜார்ஜ் கோட்டையில் இந்தக் கொடி ஏற்றப்பட்டது. அருங்காட்சியகத்தில் உள்ள இந்திய சுதந்திரக் காட்சியகம் இந்தியக் கொடியின் பரிணாம வளர்ச்சியையும், புகழ்பெற்ற மூவர்ணக்கொடியின் பின்னணியில் உள்ள கதைகளையும் காட்சிப்படுத்துகிறது.
புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகம்: சென்னை புனித ஜார்ஜ் கோட்டை, பிரிட்டிஷ் குடியேற்றத்திலிருந்தும், கோட்டையைச் சுற்றியுள்ள பல பூர்வீக கிராமங்கள், ஐரோப்பியக் குடியேற்றங்களை மெட்ராஸ் (சென்னை) நகரத்துடன் இணைக்கப்பட்டதன் மூலம் ஏற்பட்ட அடுத்தடுத்த விரிவாக்கத்திலிருந்து எழுந்தது.
புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகம் 1948-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி முதல் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. கோட்டையில் பரவலாக இருந்த ஆங்கிலேய மன்னர்களின் நினைவுச் சின்னங்களை வைப்பதற்காக இந்தக் கட்டடத்தில் அருங்காட்சியகம் அமைக்கும் சிந்தனை 1946-ம் ஆண்டில் பழைய மெட்ராஸ் காவலர் படையைச் சேர்ந்த கர்னல் டி எம் ரீட் என்பவரால் முன்வைக்கப்பட்டது.
அருங்காட்சியகத்தின் வரவேற்பு பகுதியில், கோட்டையின் பரிணாம வளர்ச்சி, 1640 முதல் அதன் கட்டுமானத்தைக் காட்டும் வரைபடம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் காலனித்துவ காலத்தைச் சேர்ந்த 3,500க்கும் அதிகமான கலைப்பொருட்கள் இப்போது உள்ளன. இவை 9 காட்சிக் கூடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : நான்தான் காந்தி..! நான்தான் சுபாஸ்..! - சுதந்திர தின மாறுவேடப் போட்டியில் கலக்கிய சிறுவர்கள்! - School Kids Fancy Dress Competition