சிவகங்கை: திருப்பத்தூர் அருகே, பூலாங்குறிச்சி கிராமத்தில் 1968ஆம் ஆண்டு முதல், இப்பகுதியில் வசித்து வரும் நான்கு சமுதாய மக்கள் இரு குழுக்களாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி வருகின்றனர். அதில் ஒரு ஆண்டு ஒரு பிரிவினரும், மறு ஆண்டு மூன்று பிரிவினர் சேர்ந்து நடத்துவது வழக்கமாகும்.
இந்நிலையில், இன்று (மே 26) பூலாங்குறிச்சியில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டும் நடத்தும் மஞ்சுவிரட்டு போட்டியை ஊரோடு சேர்ந்து நடத்த வேண்டும் என மறு தரப்பினர் கோரிக்கை வைத்து வாடிவாசல் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார், தற்சமயம் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க நாட்கள் அவகாசம் இல்லாத காரணத்தினால், வரும் காலங்களில் சேர்ந்து நடத்துவது குறித்து முடிவெடுக்கலாம் என்றும், எனவே இந்த ஆண்டு வழக்கம் போல் இவர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திக் கொள்ளட்டும் எனக் கூறியதாக கூறப்படுகிறது.
இந்த முடிவை ஏற்றுக் கொள்ளாத மற்றாெரு பிரிவினர், ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் வாடிவாசல் முன்பு அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற சில மணி நேரம் உள்ள நிலையில், பெண்கள், இளைஞர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து காவல்துறையினரும், வருவாய்த் துறையினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மஞ்சுவிரட்டு நடைபெறும் மாடுபிடி வீரர்களும், காளையின் உரிமையாளர்களும் தொழுவில் காத்துக் கொண்டிருந்தனர். மேலும், விசாரணையில் இக்கிராமத்தினர் இரண்டு குழுக்களாக பிரிந்து முதல் ஆண்டு ஊரோடு சேர்ந்தும், மறு ஆண்டு தனிப்பட்ட சமுதாயத்தினர் மட்டும் மஞ்சுவிரட்டு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், போலீசாரின் தொடர் பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்ற நிலையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.