தூத்துக்குடி: பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இன்று (பிப்.27) தமிழகம் வர உள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வருகிற ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம், இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
பிரதமர் மோடி தூத்துக்குடி வருகை: அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 28ஆம் தேதியான நாளை, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். குறிப்பாக, குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவதற்கான திட்டப் பணிகளுக்கு மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார்.
முன்னேற்பாடுகள்: பிரதமர் மோடி நாளை காலை மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடி துறைமுக வளாகத்திற்கு வருகை புரிகிறார். இதற்காக அப்பகுதியில் ஹெலிபேட் தளம் (Helipad) அமைக்கப்பட்டு, அதில் ஹெலிகாப்டர் இறங்கி சோதனை செய்யப்பட்டுள்ளது.
துறைமுகத்தைச் சுற்றி சுமார் 5 கிமீ சுற்றளவு பகுதிகள், பிரதமரின் பாதுகாப்பு படை வீரர்களின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுக ஹெலிபேட் தளத்திலிருந்து, விழா நடைபெறும் இடத்திற்கு குண்டு துளைக்காத காரில் பிரதமர் செல்கிறார். அதற்காக, குண்டு துளைக்காத கார் இன்று தூத்துக்குடிக்கு கொண்டு வரப்படுகிறது.
தூத்துக்குடியில் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ள திட்டப் பணிகள்:
ராக்கெட் ஏவுதளம் - குலசேகரன்பட்டினத்தில் 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலப்பரப்பில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் - இஸ்ரோ மூலம் நிறுவப்பட உள்ள புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இது தூத்துக்குடி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் என்றும், இதனையொட்டி பல்வேறு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாகும் என்றும் கூறப்படுகிறது.
தூத்துக்குடி துறைமுகம் - தூத்துக்குடி துறைமுகத்தில் சுமார் ரூ.7 ஆயிரத்து 500 கோடி மதிப்பில், மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இது தூத்துக்குடியின் தொழில் வளர்ச்சிக்கு ஒரு மைல் கல்லாக அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
தூத்துக்குடி வெளிப்புற துறைமுக திட்டம் (outer harbour project) - தூத்துக்குடியில் ரூ.7 ஆயிரத்து 55 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் வெளிப்புற துறைமுக திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதனால், கப்பல்கள் மூலமாக சரக்குகளை கையாளும் திறன் 4 மில்லியன் அதிகரிக்கும். இந்தியாவின் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கான செலவுகள் குறையும். அந்நியச் செலாவணி அதிகரிக்கும் என்பதால், அதிக வேலை வாய்ப்பு உருவாகும்.
இயந்திரமயமாக்கல் (Mechanization) - ரூ.2.65 கோடியில் இயந்திரமயமாக்கல் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதன்படி, வடக்கு சரக்கு பெர்த் தற்போதுள்ள நிலையில் இருந்து இயந்திரமாக்கப்படுகிறது. இதன் மூலம் சரக்குகள் கையாளும் திறன் அதிகரிக்கும்.
நன்னீர் திட்டம்: ரூ.124 கோடியே 32 லட்சம் மதிப்பில், 5mld (5 millions of liter per day) கடல் நீரை நன்னீராக்கும் ஆலை அமைக்கப்படுவதற்கான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதன் மூலமாக, ஒட்டுமொத்த துறைமுகத்திற்கான தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படுகிறது. தனியார் டேங்கர் லாரிகளை நம்பி இருக்க வேண்டி நிலை மாறும். இது தவிர, ராமேஸ்வரம் பாம்பன் தூக்கு பாலம் நடைபெற்ற 20 க்கும் மேற்பட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மீனவர்களுக்கு தடை: பிரதமர் வருகை ஏற்பாடுகளை பாஜகவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தூத்துக்குடியில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் இன்றும், நாளையும் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், துறைமுக வளாகப் பகுதியில் லாரிகள் நிறுத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு: பிரதமர் தென் மாவட்டத்திற்கு முதன் முறையாக வருகை தருவதால் மத்திய படை, மாநில போலீசார் மற்றும் பல்வேறு பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி தேனி, சிவகங்கை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் போலீசார், இன்று முதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும், மத்திய உளவு பிரிவு மற்றும் மாநில சிஐடி போலீசார், ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடம், விழா நடைபெறும் இடம் மற்றும் கடற்கரை கிராமங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 150 கடற்படை போலீசார் (Marine Police), 8 தனியார் விசைப்படகுகள், 3 மரைன் விசைப்படகுகள் உள்பட 11 படகுகளில், கடற்கரை பகுதியில் இன்று முதல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "எலான் மஸ்குக்கு கிடைக்காத குலசேகரன்பட்டினம்" விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறுவது என்ன?