சேலம்: தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவர் குமரேசன் தலைமையில் இன்று (மார்ச் 3) நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் பூமொழி, “வரும் நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக அனைத்து தொகுதிகளிலும் நூதன பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
கடந்த காலங்களில் அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளிலும் நோட்டாவுக்கு வாக்களிக்க பரப்புரை செய்தோம். தற்போது நோட்டாவுக்கு வாக்களிக்காமல், அந்த வாக்குகளை அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அளிக்க வலியுறுத்தி பரப்புரை மேற்கொள்வோம்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, சோதனை என்ற பெயரில் சாதாரண மற்றும் நடுத்தர வியாபாரிகள் கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்வதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உரிய பரிசீலனை செய்து, விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூபாய் 2 லட்சம் வரை ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சிக்கும் ஆந்திர அரசின் நடவடிக்கைக்கு, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி கண்டனம் தெரிவிக்கிறோம். தண்ணீர் என்பது மனித குலத்திற்கு மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானது. எனவே, தமிழக அரசு நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, போதை கலாச்சாரத்தை ஒழிப்பேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், தற்போது தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் பெருகிவிட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மது என்பதைக் கடந்து மோசமான போதைப்பொருட்கள் எளிதாக கிடைக்கின்றன. இதனால் மாணவர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்க் கடிக்கு மருந்து என்ற பெயரில், மிகப்பெரிய மெடிக்கல் மாபியா நடந்து வருகிறது. தெரு நாய்கள் தொல்லையால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 2,500க்கும் மேற்பட்டோர் ஹீமோபிலியா என்ற ரத்தம் உறை தன்மை அற்ற ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கான தடுப்பு மருந்தை வீடுதோறும் சென்று வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதற்கான தடுப்பு மருந்து ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்பவர்கள் மாதம் 50,000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது. அதிக பொருட்செலவு செய்ய வேண்டி இருப்பதால், ஏழை எளிய மக்கள் வேதனையில் உள்ளனர். தமிழக அரசு ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தடுப்பு மருந்தை இலவசமாக வீடு தேடிச் சென்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.