மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், தினமும் காலை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மணல்மேடு அடுத்த முடிகண்டநல்லூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குழாய் மூலம் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு, அதன் பிறகு நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தினமும் காலையில், 2 மணிநேரம் விநியோகம் செய்யப்பட்ட குடிநீர், தற்போது கடும் வெப்பம், வறட்சி நிலவுவதால் நீர்ஊற்று குறைந்ததால் தினமும் ஒரு மணிநேரம் கூட முழுமையாக அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், முடிகண்டநல்லூரில் இருந்து மயிலாடுதுறைக்கு தண்ணீர் கொண்டு வரும் பிரதான குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.
வில்லியநல்லூர் பகுதியில் செல்லும் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் பிரதான குழாயிலும் உடைப்பு ஏற்பட்டு, கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் அருகில் உள்ள வயல்வெளியில் வழிந்தோடிக்கொண்டு இருக்கிறது. இது குறித்து அப்பகுதி விவசாயி கூறுகையில், “கடந்த 2 மாதத்திற்கு மேலாக கொள்ளிடம் குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் வயலில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதனால் உளுந்து, பயிறு சாகுபடிக்கூட செய்ய முடியவில்லை. இதனை உடனடியாக சரிசெய்யவில்லை என்றால் குறுவை சாகுபடி செய்ய முடியாத சூழல் ஏற்படும். ஆகவே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதை உடனடியாக தடுக்க, நகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், இதுபோல் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதை உடனடியாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் சரி செய்து, நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வறண்ட காவிரியாக மாறிய அகண்ட காவிரி.. தண்ணீரின்றி பாறைகளாக காட்சியளிக்கும் ஒகேனக்கல்! - Hogenakkal Cauvery River Dried