சேலம்: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பி வருகிறது.
இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை நீடிப்பதால் கபினி அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் தற்போது காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட உபரி நீர் இன்று மேட்டூர் அணைக்கு வரத் துவங்கியுள்ளது. அதன்படி, மேட்டூர் அணைக்கு நேற்று 4 ஆயிரத்து 47 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த உபரி நீர் இன்று காலை 5 ஆயிரத்து 54 கன அடியாக உயர்ந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, தற்போது 16 ஆயிரத்து 557 கன அடியாக நீர்வரத்து உயர்ந்து அணையின் நீர்மட்டம் தற்போது 50 அடியாக உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால், அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில், நீர் திறப்பைவிட நீர் வரத்து தற்போது அதிகமாக இருப்பதால் ஒரு நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 0.61 அடி உயர்ந்துள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அடிப்பாலாறு, செட்டிபட்டி கோட்டையூர், பண்ணவாடி பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. அதேபோல், செட்டிப்பட்டி மற்றும் கோட்டையூர் பரிசல் துறைகளில் பரிசல் போக்குவரத்து தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது.