தருமபுரி: கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து நீர் அதிக அளவு காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தான், உபரி நீராக காவிரி ஆற்றில் 40 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது, அணைகளில் திறந்துவிடப்பட்ட நீர் நள்ளிரவு முதல் ஒகேனக்கல்லில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அந்த வகையில், இன்று காலை நிலவரப்படி 30 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, காலை 9:30 மணி நிலவரப்படி 33 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும், இன்று கபினி அணையிலிருந்து சுமார் 50 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர்வரத்து அதிகரித்தன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவியில் குளிக்க மற்றும் பரிசல் இயக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே தடை விதித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் மெயின் அருவி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி, அருவி பாதையை மூழ்கடித்துச் செல்கிறது. மேலும் ஐந்தருவி, ஐவர் பவனி உள்ளிட்ட பகுதிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.