ராணிப்பேட்டை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்நிலையில், வாக்குச்சாவடிகளில் அனைத்து அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு, வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த வகையில், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து, வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை, வாலாஜாபேட்டையில் உள்ள வாக்கு எண்ணும் மையமான அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி வளாகத்திற்கு கொண்டுவரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இன்று மதியம் வரை நடைபெற்று வந்த பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில், அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டு சீல் வைக்கபட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் 300 சிசிடிவி கேமாராக்கள் பொருத்தி, வருவாய்த்துறை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். அதேபோல, 400 போலீசார் மற்றும் 24 பேர் கொண்ட துணை ராணுவப் படையினர் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.