சென்னை: பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஜூன் 14ஆம் தேதி நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பு மாணவர்களுக்காக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பற்றி கேட்டபோது, பள்ளிக் கல்வித் துறையில் இருந்து ஒரு பெரிய பட்டியலே வந்தது.
அதில் மிக முக்கியமான சில திட்டங்களின் பெயரை மட்டும் சொல்ல வேண்டும் என்றால், 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் காலை உணவுத் திட்டம், 27 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் இல்லம் தேடிக்கல்வி, 28 லட்சம் மாணவர்களுக்கு திறன்பயிற்சி வழங்கி வரும் நான் முதல்வன், 23 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் எண்ணும் எழுத்தும் திட்டம்'' என பல திட்டங்களை கூறினார்.
கரோனா பெருந்தொற்றுக் காலத்தின்போது 19 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டதால் கற்றலில் ஏற்பட்ட இழப்பைக் குறைக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட திட்டம் இல்லம் தேடிக் கல்வியாகும். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 2 லட்சம் பகுதியில் தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்க ஊதியமாக வழங்கப்பட்டது.
மேலும், பள்ளி சென்ற மாணவர்களுக்கு மாலை நேரங்களில் மையங்களில் கற்பிக்கும் பணியும் செய்யப்பட்டன. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரித்துள்ளதாக மாநிலத் திட்டக்குழு நடத்திய ஆய்விலும் தெரிவித்தது. இரண்டு ஆண்டுகள் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் குழந்தைகளின் கற்றல் இடைவெளியைக் குறைக்க போதுமானதாக இல்லாததால் அரசு இத்திட்டத்தை மேலும் நீட்டித்துள்ளது என பள்ளிக்கல்வித்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றியவர்களை பயன்படுத்தி மகளிர் உரிமைத் தொகை கணக்கெடுப்பை அரசு நடத்தியது. மேலும், பள்ளி மாணவர்களுக்கான காலணி அளவீடு செய்து அளிக்கவும் பள்ளிக்கல்வித்துறை பயன்படுத்தியது. பள்ளி மாணவர்களின் ஆதார் விவரங்களை சரிபார்த்து பதிவிடும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், 2024-25ஆம் கல்வியாண்டில் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்ந்து செயல்படவில்லை. மேலும், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வீடுகளுக்கு அருகே குறிப்பிட்ட பகுதிகளில் மையம் உருவாக்கி 2 லட்சம் தன்னார்வர்களைக் கொண்டு முதலமைச்சரின் கனவு திட்டம் என்ற பெயருடன் 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டம் கரோனா காலத்தில் துவக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
தன்னார்வலர்கள் கவலை: தற்போது இந்த திட்டம், கல்வியில் பின்தங்கிய 50 ஒன்றியங்களில் மட்டுமே நடைபெறும் என மாநிலத் திட்ட அலுவலர் தெரிவித்துள்ளதாக கூறும் தன்னார்வலர்கள், இந்த திட்டத்தின் மூலம் பயன் அடைந்த மாணவர்களும் பாதிக்கப்படுவர் என அச்சம் தெரிவிக்கின்றனர்.
இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்காக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் மூலம் தன்னார்வலர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்பட்டன. இந்த நிலையில், இல்லம் தேடி கல்வித் திட்டத்தை 2.0 என மாற்றி கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களாக அரியலூர், பன்ருட்டி, நல்லூர், மங்களூர், கரிமங்களம், பாலக்கோடு, பெண்ணகரம், அம்மாப்பேட்டை, அந்தியூர், நம்பியூர், சத்தியமங்கலம், தாலவாடி , திருக்கோவிலூர், தியாகதுருகம், உளூந்தூர்பேட்டை, திருநாவலூர்,கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், கல்வராயன்மலை, கடவூர், சூளகிரி, வேப்பனஹல்லி, கேளமங்கலம், தளி, மலையசமுத்திரம், கொல்லிமலை, வேப்பூர், பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன் பாளையம், சங்ககிரி , தாரமங்கலம், வீரப்பாண்டி, ஏற்காடு, எடைப்பாடி, கடயம்பட்டி உள்ளிட்ட 44 ஒன்றியங்களில் மட்டுமே செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கல்வியில் பின்தங்கிய 14 மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி இரண்டாம் கட்டம் செயல்படுத்தப்பட உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் கராேனா காலத்தில் மாணவர்களுக்கு கல்வி அறிவை அளித்த இல்லம் தேடி கல்விப் பணியாளர்கள் தற்பொழுது மீண்டும் வேறு வேலையை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு