சென்னை: கேண்டிடேட் சர்வதேச சாம்பியன்ஷிப் பட்டத்தை இளம்வயதில் வென்ற வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார். குகேஷுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்களில் ஒருவரான விஷ்ணு பிரசன்னா, நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.
அதில், “செஸ் கேண்டிடேட் போட்டி மிகவும் கடினமானது எனக் கூறுவார்கள். ஆனால், மிகவும் இளம் வயதில் கேண்டிடேட் போட்டியில் குகேஷ் வெற்றி பெற்று இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. குகேஷ் சிறுவயதில் இருந்தே திறமையாக விளையாடக்கூடியவர். விஸ்வநாத் ஆனந்த்துக்குப் பிறகு யார் என்ற கேள்வி இந்தியா முழுவதும் எழுந்தது. முக்கிய சர்வதேசப் போட்டிகளில் தமிழ்நாட்டின் வீரர்கள் வெற்றி பெறும் அளவிற்கு முன்னேறி வருகின்றனர்.
சென்னை இந்தியாவின் செஸ் தலைநகரமாக இருக்கிறது என்றால், அது விஸ்வநாதன் ஆனந்த் மூலமாக அந்தப் பெயர் பெற்றது. சென்னையைப் பொறுத்தவரையில், அதிகமான செஸ் கிளப்களும் (club), அதிக போட்டிகளும் நடைபெறுவதால் தமிழ்நாடு அசோசியேஷன் நல்ல முறையில் செயல்படுகிறது.
இதனால் செஸ் போட்டிகளில், தமிழ்நாடு இந்தியாவில் முதன்மையாக இருக்கிறது. சிறு வயதிலிருந்தே குகேஷ் திறமையான வீரராக இருந்தார். குகேஷ் கடந்த 2017ஆம் ஆண்டு தான் முதன்முதலில் செஸ் பயிற்சி தொடங்கினார்.
கடந்த 2019ஆம் ஆண்டு உலகின் இரண்டாவது இளம் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார். அதன்பிறகு, அதி விரைவாக உலகின் மிகப்பெரிய போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். பின்னர், கேண்டிடேட் போட்டியை வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
குகேஷுக்கு பயிற்சி கொடுப்பதற்காக ஒரு குழு செயல்பட்டு வருகிறது. அந்தக் குழு அவருடைய பலவீனம், பலம் குறித்து ஆராய்ந்து, அதற்கு ஏற்றவாறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அவர் எதிர்கொள்ளும் எதிரணி வீரரின் பலம், பலவீனம் தெரிந்தும், அதற்காகவும் பிரத்தேயகமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
ஏப்ரலில் நடைபெற்று முடிந்த கேண்டிடேட் போட்டிக்கு, ஜனவரி முதல் பயிற்சிகள் தொடங்கி இருந்தோம். செஸ் விளையாட்டை பொறுத்தவரையில், விளையாட்டு பயிற்சியும், மனப் பயிற்சியும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. குகேஷ் அதிகளவு போட்டிகளை விளையாடி பயிற்சிகளை மேற்கொண்டார்.
சராசரியாக ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் வரை பயிற்சியை மேற்கொள்வார். போட்டி நெருங்கும் நேரத்தில், தன்னுடைய பயிற்சியைக் குறைத்துக் கொண்டு ஓய்வெடுப்பார். நவம்பரில் உலக சாம்பியன் செஸ் போட்டி நடைபெற இருப்பதால், அதற்கான பயிற்சிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார். உலக செஸ் சாம்பியன் போட்டி மிகவும் கடினமானதாக இருக்கும்.
குகேஷ் போட்டித் திறனை வளர்த்துக்கொண்டே வருகிறார். சாம்பியன் போட்டிக்குள், மேலும் திறனை மெருகேற்றி வெற்றிவாகை சூடுவார். செஸ் போட்டி மூளைக்கு நல்ல பயிற்சியாக இருக்கிறது. செஸ் போட்டியை விளையாடுவதற்கு குழந்தைகளும், இளைஞர்களும் ஆர்வமாக இருக்கின்றனர்.
பெற்றோர் செஸ் விளையாடுவதை ஊக்குவித்து விளையாட வைத்தால், மூளைக்கு நல்ல பயிற்சி அளிப்பதாக மாறும். தமிழ்நாடு அரசு செஸ் விளையாட்டிற்கு அங்கீகாரமும், உறுதுணையாகவும் இருக்கின்றது. சர்வதேசப் போட்டிகளை தமிழ்நாடு நடத்தி வருகிறது. இன்னும் கூடுதலான போட்டிகளை நடத்தினால் நன்றாக இருக்கும்.
அதேபோல், தமிழ்நாட்டின் பள்ளிகளில் செஸ் விளையாட்டை கட்டாய விளையாட்டாக மாற்றினால், செஸ் விளையாட்டு மேம்பட உதவியாக இருக்கும். குகேஷ் சென்னையில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருக்கிறார். சென்னையில் சர்வதேசப் போட்டி நடைபெற்றால் அந்தப் போட்டிகளில் வெற்றி பெறுவார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருவாரூரில் கஞ்சா போதையில் குமாஸ்தாவை வழிமறித்து தாக்கிய 3 இளைஞர்கள் கைது! - Thiruvarur Clerk Attack Case