விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான தாளமுத்து பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை நாக்பூர் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அனுமதி பெற்றது. இந்த ஆலையில் பட்டாசுக்கான ரசாயன மூலப் பொருட்களை கலவை செய்யும் போது ஏற்பட்ட உராய்வு காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் 3 அறைகள் வெடித்து சிதறி தரைமட்டமானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து நீண்ட நேரம் போராடி காயமடைந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் அறையில் பணியாற்றிய முதலிப்பட்டியை சேர்ந்த வீரகுமார், கன்னிசேரி புதூரை சேர்ந்த காளிராஜ் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் நாமக்கல் வழியாக இயக்கப்படுமா? - தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு!
மேலும் சரவணக்குமார், சுந்தரமூர்த்தி ஆகிய இருவர் 90 சதவீதம் தீக்காயத்துடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் முருகேசன், மேலாளர் கருப்பசாமி, ஒப்பந்ததாரர் முத்துகுமார் ஆகிய 3 பேர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணம் ஏற்படுத்தியது, விபத்து ஏற்படும் என தெரிந்தே கவனக்குறைவாக செயல்பட்டது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேலாளர் கருப்பசாமியை கைது செய்த வச்சக்காரப்பட்டி போலீசார் தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் முருகேசன், ஒப்பந்ததாரர் முத்துக்குமார் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பொது இடத்தில் ராமர் கோயில் நிகழ்வுகளை ஒளிபரப்ப அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!